செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே பழைய பொருட்கள் வாங்கும் கடையில் நடத்திவரும் வயதான தம்பதியிடம் மாமூல் கேட்டு மறைமலைநகர் போலீசார் தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் அருகாமையில் வயதான தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பழைய பொருள் வாங்கும் கடை (காயலாங் கடை) வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து போலீசார் ரூ.100 முதல் ரூ.200 கட்டாயப்படுத்தி மாமுல் வாங்குவதாகவும், ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உயர் அதிகாரிக்கும் ஓட்டுனருக்கும் என இருவருக்குமே ரூ.200 கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குகிறார்கள் என காயிலாங் கடை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதேபோல், காவல் நிலையத்திற்கு மாதம், மாமுல் கொடுத்தாலும் ஒரு சில காவலர்கள் பெட்ரோல் போட காசு இல்லை என்று இந்த வழியாக வரும்போது எல்லாம் மாமூல் கேட்கிறார்கள். மீறி தர மறுத்தால் திருட்டு பொருள் வாங்குறீங்க என உங்கள் மீது வழக்கு போட்டு ரீமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.
அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் காவல்துறையினர் வரும் போதெல்லாம் ரூ.100, ரூ.200 என மாமுல் கொடுத்து அனுப்புகிறோம். மேலும், எங்கள் கடையை ஒட்டி உள்ள அனைத்து கடைகளுக்கும் இதே நிலமைதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க என மன குமறலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வயதான தம்பதிகள் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வரும் வயதான தம்பதியிடம் மாமுல் கேட்டு போலீசார் தொல்லை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.