திருவாரூர், பிப். 11: பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தக்கோரி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கவேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், பல்நோக்கு மருத்துமனை பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கவேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்,
அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள வருவாய் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி இடங்களை உடனடியாக வழங்கவேண்டும், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டே அமல்படுத்த வேண்டும், மருத்துவத்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட துறைகளில் தனியார் கம்பெனிகள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் பிரகாஷ், மாநில துணைப் பொதுச்செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில செயலாளர் சௌந்தரராஜன், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் சந்திரசேகரன் மற்றும் சிஐடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் அனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.