காஞ்சிபுரம், ஜன.22: பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சி மாவட்ட சார்பில், திருப்பூரில் நடைபெற்ற மாநில செயற்குழு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் இருந்து வருவதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கருவூலம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் வி.ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் உத்தம ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிச்சை லிங்கம் வரவேற்பு பேசினார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 21 மாத அகவிலைப்படி இழப்பை ஈடுசெய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை விருப்பமுள்ளவர்கள் மட்டும் அமல்படுத்த வேண்டும்.
மேலும், தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு மாநில நிர்வாக தீர்ப்பானையம் மற்றும் கூட்டு ஆலோசனை குறை கமிட்டியும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், மாவட்ட துணை தலைவர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திருவேங்கடம், மாநில தணிக்கையாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.