*அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வலங்கைமான் : வலங்கைமானில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், புள்ளியியல் அலுவலகம்,மனமகிழ் மன்றங்கள், வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம்,காவல்நிலையம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
இதில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு வேறு பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்தது.
அதனையடுத்து அந்த கட்டிடங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போனதை அடுத்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் கூடாரமாகவும் கொசுக்களின் இருப்பிடமாகவும் உள்ளது.இருப்பினும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புள்ளியியல் அலுவலகம் காவல் நிலையம் ஆகியவை மட்டும் தற்போது அதே பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
காவல்நிலையம் நூறாண்டு கடந்த பழமையான கட்டிடத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருகின்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூகநலத்துறை கிராம ஊராட்சிகள் துறை இ-சேவை மையங்கள் மையம் பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.இப்பணிகள் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்கள் மேற்பார்வையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .
மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு தலைவர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள் என உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் பணிகள் தொடர்பாக வந்து செல்கின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கடந்த திமுக ஆட்சியில் 1969ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளை கடந்த நிலையில் மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் கசிவததை அடுத்து அலுவலகத்தில் உள்ள கணினிகள்,பதிவேடுகள் உள்ளிட்டவைகள் சேதமடைகின்றன.
மேலும் அவ்வப்போது அலுவலகத்தின் மேற்கூரை பகுதியிலிருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சிறுசிறு விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. கணினி உள்ளிட்டவைகளுக்கு தற்காலிகமாக ஒயரிங் செய்யப்பட்டுள்ளதால் அலுவலகத்தின் கட்டிடத்தில் எங்கு பார்த்தாலும் பாதுகாப்பற்ற நிலையில் வயர்கள் உள்ளன.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய அலுவலகத்தில் போதிய கழிவறை வசதியும் இல்லை. பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இடவசதியும் இல்லை.
வலங்கைமானில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு துறை அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காவல் நிலையம் மற்றும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊட்டச்சத்து அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை கடந்த ஆட்சியில் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய திமுக ஆட்சியில் வலங்கைமான் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம் கட்டிடம் கட்டப்படவில்லை.
அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கொண்டு பணிகள் எவையும் நடைபெறவில்லை எனவே உரிய நிதியினை ஒதுக்கி புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதில் போதிய முனைப்பு காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் appeared first on Dinakaran.