பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார். தனது 50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளால் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
பல்வேறு திரைத்துறை விருதுகள், ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், 2008ல் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ஒன்றிய அரசின் தேசிய விருது உளிட்ட விருதுகளை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் 1997 இல் தமிழ்நாடு அரசு சார்பில் நடிகை சரோஜாதேவிக்கு எம்ஜிஆர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான சரோஜா தேவி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் செய்தி; தென்இந்திய சினிமா வரலாற்றில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த புகழ்பெற்ற நடிகை திருமதி சரோஜாதேவி அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர் திரையுலகில் அறிமுகமான முதற்கட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திரையுலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களை ஏற்று, வெகுவிரையில் புகழ்பெற்றார். தன் இயல்பான நடிப்புத்திறனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அவர் நடிப்பில் உருவான திரைப்படங்கள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் பெற்றவர். அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திரைப்படத்துறையினர், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் செய்தி; பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு இரங்கல். தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்த சரோஜா தேவி கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைத்துக் குடும்பங்களுக்கு நன்கு அறிமுகமானவர். மத்திய அரசின் பத்மபூஷன் மற்றும் தமிழக அரசு, ஆந்திர அரசு, கர்நாடக அரசால் வழங்கப்படும் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவு; செல்வப்பெருந்தகை, அன்புமணி ராமதாஸ் இரங்கல் appeared first on Dinakaran.