பன்ஸ்வாரா: நில மாபியாவுடன் போலீஸ் கைகோர்த்த விவகாரத்தில் ‘வேண்டும் என்றால் காலில் கூட விழுகிறேன்’ என்று டிஎஸ்பியிடம் ஆளும் பாஜக எம்.எல்.ஏ கதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் காதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நில மாபியாக்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கு உள்ளூர் காவல்துறையினரே துணை போவதாகவும் நீண்ட காலமாகப் புகார்கள் இருந்து வந்தன. கடந்த 2022ல் இறந்த பெண்ணின் நிலத்தை மோசடியாக விற்பனை செய்தது, அபபுரா பகுதியில் பாஜக பிரமுகரின் பேரன் மற்றும் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியது போன்ற பல முக்கிய வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இந்தச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த காதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் மீனா, நில அபகரிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார். அங்கு, காவல் ஆய்வாளர் ரோஹித் குமார், நில மாஃபியாக்களுடன் கைகோத்துக்கொண்டு செயல்படுவதாகவும், காவல் நிலையத்தைக் குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றிவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தனது கோரிக்கைக்குப் பலன் கிடைக்காததால், காவல் நிலைய வாசலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி சுதர்சன் பாலிவாலிடம், ‘வேண்டும் என்றால் உங்கள் காலில் கூட விழுகிறேன்; தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்’ என்று கைகூப்பிக் கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என்ற உயர் அதிகாரியின் உறுதிமொழியை அடுத்து அவர் போராட்டத்தைக் கைவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post நில மாபியாவுடன் போலீஸ் கைகோர்த்த விவகாரம்; ‘காலில் கூட விழுகிறேன்’- டிஎஸ்பியிடம் கதறிய ஆளும் பாஜக எம்.எல்.ஏ appeared first on Dinakaran.