பழமையான கட்டிடம் சாலையில் இடிந்து விழுந்து முதியவர் நசுங்கி பலி காட்பாடியில் சோகம் ஓய்வூதியம் வாங்க சைக்கிளில் சென்றபோது

2 weeks ago 4

 

வேலூர், நவ.6: காட்பாடியில் ஓய்வூதியம் வாங்க சைக்கிளில் சென்றபோது பழமையான கட்டிட மேற்கூரை சாலையில் இடிந்து விழுந்து முதியவர் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறையை சேர்ந்தவர் பாஸ்கரன்(66). இவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் எழுதுபவரின் உதவியாளராக இருந்து வந்துள்ளார். தற்போது முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தார். இவருக்கு எஸ்தர்ராணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் இறந்து விட்டார். மகள்களில் ஒருவருக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். ஒரு மகள் படித்து வருகிறார். இந்த நிலையில், தனது மாதாந்திர முதியோர் ஓய்வூதியத்தை தாராபடவேட்டில் இயங்கி வரும் வங்கியில் இருந்து எடுப்பதற்காக வீட்டில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காட்பாடி ரயில் நிலைய மேம்பாலத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்தபோது, அங்கு ஹார்டுவேர் கடை இயங்கி வந்த பழைய கட்டிடத்தின் மேல்மாடி கூரை திடீரென இடிந்து சாலையில் சென்று கொண்டிருந்த பாஸ்கரன் மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அறிந்து விரைந்து வந்த காட்பாடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பாஸ்கரன் உயிரிழப்புக்கு காரணமான கட்டிடம் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சோயப் என்பவருக்கு சொந்தமானது என்றும், கடந்த 1943ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கட்டிட உரிமையாளரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் அந்த கட்டிடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து அவ்வழியாக யாரும் செல்லாதவாறு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் காட்பாடி-சித்தூர் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post பழமையான கட்டிடம் சாலையில் இடிந்து விழுந்து முதியவர் நசுங்கி பலி காட்பாடியில் சோகம் ஓய்வூதியம் வாங்க சைக்கிளில் சென்றபோது appeared first on Dinakaran.

Read Entire Article