
சென்னை,
சுந்தர் சி ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர் குடும்ப படமான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா' ஆகிய படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றன. தற்போது இவர் 'கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி, 25-வது திருமணநாளையொட்டி தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனும் செலுத்தி இருக்கிறார்.