பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

2 months ago 24

பழனி,

பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை மற்றும் கோவில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. இதேபோல் பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டப்பட்டது.

விழாவின் 10-ம் நாளான 12-ந்தேதி பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தசாம பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Read Entire Article