
திண்டுக்கல்,
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி, முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவில் உண்டியலில் பணம், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 31 லட்சத்தை தாண்டியது, தங்கம் 557 கிராம், வெள்ளி 21 கிலோ, வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.