பழனி: பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பழனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திவான் மைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வரும் ஞாயிறு அன்று பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பழனி நகர காவல்துறையிடம் முறையான காவல்துறை பாதுகாப்பும், அனுமதியும் கோரி விண்ணப்பித்திருந்தோம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். குறிப்பாக தைப்பூசம் நடந்து வருவதால் பாதுகாப்பு வழங்க முடியாது என கூறி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இது ஏற்க தக்கது அல்ல எனவே எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று காலை நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்திருந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகினார். மனுதாரர்கள் அனுமதி கோரியுள்ள இடம் 50 அடி தூரத்தில் பெரியார் சிலை உள்ளது அங்கு தான் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று அனுமதி கோரியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது தைப்பூசம் நடைபெற்று வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் இவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பழனியை தவிர்த்து பழனி அருகே வேறேதேனும் இடங்களை தேர்வு செய்தால் இவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை பரிசீலிக்கப்படும் என்றார். தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியாரைப்பற்றி அவதூறாக கருத்துக்களை பரப்பி வருகிறார். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு இவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது. அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். பொதுக்கூட்டம் நடத்துகிறீர்கள் வேறு ஒரு இடத்தில் நடத்தினால் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினர். பொது கூட்டத்திற்கு அனுமதிக்கின்றோம் ஆனால் நீங்கள் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் சம்மந்தப்பட்ட இடத்தில் அனுமதி தர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் நெய்க்காரப்பட்டியில் எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, பெரியார் சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது மாற்று இடமான நெய்க்காரபட்டியில் வருகின்ற 22 ஆம் தேதி அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம் என அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.
The post பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த ஐகோர்ட் கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.