திருப்புத்தூர், பிப்.6: திருப்புத்தூரில் இருந்து நேற்று பழநிக்கு பாளைய நாட்டார் காவடி குழுவினர் புறப்பட்டனர். மணச்சை பாளைய நாட்டார் காவடி குழுவினர் 47ம் ஆண்டு காவடி பயணத்தை குன்றக்குடியில் நேற்று வேல் பூஜை முடித்து காவடி பயணத்தை தொடங்கினர். குருசாமி முருகுசோலை, சண்முக சேவா சங்கத் தலைவர் துரைசிங்கம் தலைமையில் பயணத்தைத் தொடங்கினர். இதில் பள்ளத்தூர், நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியாபட்டி, கண்டனூ்ர், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் பகுதியைச் சேர்ந்த 175 பேர் காவடி சுமந்து செல்கின்றனர்.
காவடிகள் நேற்று காலை 10 மணி அளவில் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில வரவேற்பு அளிக்கப்பட்டு காவடிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து புறப்பட்ட காவடிகள் காரையூரில் வேல்பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் பயணம் மேற்கொண்ட காவடி பக்தர்கள் பாண்டாங்குடி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக பிப்.10ம் தேதி பழநியை அடைந்து தைப்பூச திருநாளான புதன்கிழமை சண்முக சேவா சங்கமடத்தில் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானத்தில் பங்கு கொண்டு மறுநாள் அனைத்து காவடிகளும் பால்குடங்களுடன் கிரிவலம் வந்து மலையேறி காவடி செலுத்த உள்ளனர்
The post பழநிக்கு புறப்பட்ட நாட்டார் காவடிகள் appeared first on Dinakaran.