பழநி வனப்பகுதியில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரிப்பு: தென்னை மரங்கள் சேதம்

2 weeks ago 2

 

பழநி, ஜன. 21: பழநி பகுதியில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில், கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனேதுமில்லை. பழநி வனச்சரக எல்லைகளில் உள்ள அணைகளில் நீர் நிரம்பி உள்ளன.

இதனால் யானைகளின் பாதை தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சில யானைக் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதன்படி பழநி அருகே ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சிந்தலவாடம்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்த ஒற்றை யானை, அங்கிருந்த 7 தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியது. இத்துடன், அப்பகுதியில் போடப்பட்டிருந்த சோலார் மின்வேலிகளை உடைத்தும் அட்டகாசம் செய்துள்ளது.

ஒற்றை யானை நடமாட்டத்தால் வனச்சரக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கவும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் வனத்துறையினருடன், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

The post பழநி வனப்பகுதியில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரிப்பு: தென்னை மரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article