*கோயில் இணை ஆணையர் தகவல்
பழநி : பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய கோயில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இத்திருவிழாவிற்கு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
இத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்11ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவரென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட உள்ள வசதிகள் குறித்து பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியிருப்பதாவது:
பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வரும் புது தாராபுரம் சாலை, பழைய தாராபுரம் சாலை மற்றும் உடுமலை தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் ஏராளமான இடங்களில் இளைப்பாறும் மண்டபங்களும், தற்காலிக நிழற்பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிரிவீதி மற்றும் மலைக்கோயில்களில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் நடந்து வரும் பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒளிரும் குச்சிகள் மற்றும் கை பேண்டுகள் வழங்கப்பட உள்ளன. பாதயாத்திரை பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே போலீசார் உதவியுடன் தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்யும் அதிகளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வழித்தடங்களிலும், மலைக்கோயிலிலும், அடிவார பகுதிகளிலும் ஆங்காங்கே முதலுதவி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. பக்தர்கள் அடிவார பகுதியிலும், மலைக்கோயிலிலும் வெயிலில் வாடுவதைத் தடுக்க நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
The post பழநி பங்குனி உத்திர திருவிழாவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் appeared first on Dinakaran.