சென்னை,
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் ஆய்வுக்கூடத்தில் நேற்று ஏற்பட்ட ரசாயன வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அரசும் பொறுப்பேற்று ஆய்வு செய்து, இதற்கான காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு, 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்! தற்போது வரை தமிழக அரசு வாயு கசிவுக்கான உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை. இனியும் தாமதமின்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களும், அரசும் உடனடியாக சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆய்வு செய்து, இந்த வாயுக் கசிவு ஏற்பட்டதன் காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இனிவரும் காலங்களில் இது போன்ற விபரீதமான சம்பவம், பள்ளிக்கூடங்களில் நடக்காமல் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசின் கடமை. எனவே தமிழக அரசு ஒவ்வொரு துறையிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.