பள்ளிபாளையம்: வீட்டில் தனியாக இருந்த, முன்னாள் கூட்டுறவு வங்கித்தலைவரின் மனைவியின் வாயில் துணியை அடைத்து காதிலிருந்த கம்மலை கழற்றிய போது மூச்சுதிணறி இறந்தார். இதுதொடர்பாக விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் துரைசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (80). வெப்படையை அடுத்துள்ள பாதரை கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அன்பழகன், அரசு என்ற இரண்டு மகன்கள் உண்டு. கணவர் துரைசாமியும், இளைய மகன் அரசும் காலமாகி விட்டனர். பாதரை கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டில் கண்ணம்மாள் தனியாக வசித்து வந்தார். கண்ணம்மாவின் வீட்டில் ராசிபுரம் அத்தனூரை சேர்ந்த சங்கர் (29) என்ற விசைத்தறி தொழிலாளி வாடகைக்கு வசித்து வருகிறார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கண்ணம்மாவின் வீட்டிலிருந்து சத்தம் வந்துள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள அவரது உறவினர்கள், அங்கு வந்துள்ளனர். அப்போது விசைத்தறி தொழிலாளி சங்கர் உள்ளே இருந்துள்ளார். அவரிடம் கண்ணம்மாள் போராடியுள்ளார். இதை கண்ட உறவினர்கள் சத்தம் போடவே, அங்கிருந்த சங்கர், கண்ணம்மாவை விட்டுவிட்டு வெளியில் ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது கண்ணம்மாள் உணர்வின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு எலந்தகுட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிடிபட்ட விசைத்தறி தொழிலாளியை போலீசார் விசாரித்ததில், மூதாட்டி கண்ணம்மாள் காதில் தோடும், விரலில் மோதிரமும் அணிந்திருந்ததை கவனித்து, வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் உள்ளே புகுந்துள்ளார். அவரை கண்டு மூதாட்டி சத்தம் போடவே, அவரது வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு காதில் இருந்த முக்கால் பவுன் தோடு, கையிலிருந்த மோதிரம் ஆகியவற்றை கழற்றியபோது, அருகில் உள்ளவர்கள் அங்கு வரவே சிக்கிக்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசைத்தறி தொழிலாளி சங்கர் மூதாட்டியிடம் பறித்த தோடு, மோதிரம் ஆகியவற்றை தனது வாயில் அடக்கி வைத்திருந்தார். இதை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை appeared first on Dinakaran.