பள்ளிகொண்டா அருகே பயங்கரம்; பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை: கல் நெஞ்சம் கொண்ட தாயால் விபரீதம்

2 weeks ago 3

பள்ளிகொண்டா, ஜன.22: பள்ளிகொண்டா அருகே கல் நெஞ்சம் படைத்த தாயின் விபரீத செயலால் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் இரஜாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள விவசாய கிணற்றில் பச்சிளம் குழந்தை சடலம் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று காலை 7.30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன், காவலர் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு அதே பகுதியை சேர்ந்த கோதண்டபாணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீரில் சடலமாக மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, பொதுமக்களின் உதவியுடன் போலீசார் கிணற்றில் சடலமாக இருந்த ஆண் குழந்தையை மீட்டனர். குழந்தையை மீட்டு கிணற்றின் மேலே கொண்டு வரப்பட்ட போது அங்கு கூடியிருந்த கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் கதறி அழுத சம்பவம் கல் நெஞ்சையினையும் கரைய வைப்பதாக இருந்தது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில், கிணற்றில் சடலமாக கிடந்த ஆண் குழந்தை பிறந்த 2 நாட்களே ஆகி இருக்கலாம் என்றும் யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் மாலை தான் வீசி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த பகுதி சுற்று வட்டாரத்தில் கடந்த 1 வாரத்தில் குழந்தை பிறந்த விவரங்களை அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆண் குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் கல் நெஞ்சம் படைத்த தாயின் விபரீத செயலால் நடந்த நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பள்ளிகொண்டா அருகே பயங்கரம்; பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை: கல் நெஞ்சம் கொண்ட தாயால் விபரீதம் appeared first on Dinakaran.

Read Entire Article