சென்னை: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவ- மாணவியர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதற்கட்டமாக சென்னை கண்ணகி நகர் பகுதியில் உள்ள எழில் நகரில் 7 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 20 சிறார்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கண்ணகி நகர் மற்றும் அதை அடுத்துள்ள எழில் நகர் பகுதி மீள் குடியேற்ற பகுதியாக உள்ளது. அதில், 43 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டும் 8 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அதிகளவில் சிறார்களின் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட 8 சிறப்பு குழுக்கள், பள்ளிக்கல்வித்துறை, தொழிலாளர் துறை மற்றும் தன்னார்வலர் அமைப்பினர் கொண்ட குழுவினர் மேற்கண்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தினர். அதன்படி, 50 சிறுமியர் உள்பட 79 சிறார்கள் பள்ளிகளில் இருந்து இடைநின்றுள்ளது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பேசியதாவது: பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளிகளை விட்டு பாதியில் நின்ற மாணவர்களை அடையாளம் காண்பது, அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதும் தொடர்ந்து செய்ய வேண்டிய பணியாக இருக்கிறது.
அந்தவகையில், வெவ்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இந்த சிறப்பு குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு சாந்தோம் மற்றும் பாரிமுனையில் உள்ள குழந்தைகளும் அந்த பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பள்ளிகளில் இருந்து இடைநின்ற சிறார்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி மும்முரம்: எழில் நகரில் 20 சிறார் சேர்ப்பு, அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.