வேலூர், பிப்.13: வேலூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அரசுப் பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி பள்ளிக்கு செல்லும் போது, மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும்போதும் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஓரிரு நாட்களுக்கு பின்னர் மாணவியிடம் சென்று அந்த வாலிபர் காதலிப்பதாக கூறியுள்ளார்.
அதனை அவர் ஏற்கமறுத்து விட்டார். அதன் பின்னரும் வாலிபர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து நாளுக்கு நாள் வாலிபரின் காதல் தொல்லை அதிகமாகி கொண்டே சென்றது. அதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையாம். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுதொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த பால் வியாபாரி குணா என்ற குணசீலன்(19) என்பவர் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
The post பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது வேலூர் அருகே appeared first on Dinakaran.