லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் தர்குல்வா பகுதியில், 2 பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் 2 வாலிபர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் தீரஜ் படேல் மற்றும் ரித்திக் ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று அவர்கள் இருவரையும் கஞ்சன்பூர் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை சுடமுயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் இருவரையும் காலில் சுட்டுப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் 18 முதல் 20 வயதுடையவர்கள். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.