மக்களின் குரலுக்கு முக்கியத்துவம் உள்ள உலகில், நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தேர்தல் குறித்த கல்வி விழிப்புணர்வு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அங்கீகரித்து தேர்தல் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்கும் தகவல் அறிந்த மற்றும் பொறுப்புள்ள குடிமகன்களாக விளங்குவதற்கு தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் ( ELC- ELECTORAL LITERACY CLUB) உருவாக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் அனைத்து வயதினரிடையேயும் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் குடிமை ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அடிமட்ட அமைப்புகள் ஆகும். இந்த மன்றங்கள் ஜனநாயக கலாசாரத்தை வளர்ப்பதற்கான ஊக்கிகளாக செயல்படுகின்றன.
தேர்தல் கல்வியறிவு மன்றம் என்பது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே ஆர்வமூட்டும் செயல்பாடுகள் மற்றும் அனுபவத்தின் மூலம் அவர்களின் தேர்தல் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும் அமைக்கப்படும் ஒரு தளமாகும்.
தேர்தல் கல்வியறிவு மன்றங்களில் கற்றல் வேடிக்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மாணவர்களை சிந்திக்கவும் கேள்விகளை கேட்கவும் தூண்டுவதற்கும் ஊக்கப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கல்வியறிவு மன்றங்களில் உறுப்பினர்கள் சுவாரசியமான மற்றும் சிந்தனையை தூண்டும் வகையிலான, பெரும்பாலும் வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருப்பார்கள். சுமார் 25 செயல்பாடுகள் மற்றும் ஆறு விளையாட்டுகள் குறிப்பிட்ட தேர்தல் விழிப்புணர்வை வழங்குவதற்காக கவனமுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் நோக்கங்கள்
1. தேர்தல் விழிப்புணர்வு உருவாக்கம் (குறிப்பாக வாக்கின் மதிப்பைப் புரிந்து கொள்ளுதல்)
2. இளைஞர்களின் பொறுப்புணர்வை ஊக்குவித்தல்.
3. நல்ல குடிமகன் பயிற்சி.
4. குறிப்பிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல் மற்றும் விவாதம் நடத்துதல்.
5. தேர்தல் செயல்முறை, EVM, VVPAT போன்றவற்றின் செயல்முறை மற்றும் சட்டங்கள் பற்றிய அடிப்படை அறிவு வளர்த்தல்.
6.மக்கள் தலைவர்களின் தகுதிகள் பற்றிய புரிதல்.
7.மாணவர்களின் சமூக பொறுப்பை வளர்த்தல்.
8. தகுதி உடைய அனைவரும் வாக்காளர் ஆக பதிவு செய்தல்.
9. ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படுகிறது என்ற முழக்கத்தை பின்பற்றி தேர்தல் பங்கேற்பு கலாசாரத்தை உருவாக்குதல்.
10. தேர்தல் கல்வியறிவை சமூகங்களுக்கு விரிவுபடுத்துதல்.
தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் குறிக்கோள்
‘EVERY VOTE COUNTS’, ‘NO VOTE TO BE LEFT BEHIND’ என்பதே தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் குறிக்கோளாகும்.
பள்ளியளவில் தேர்தல் கல்வியறிவு மன்றம்
ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் படிக்கின்ற எதிர்கால வாக்காளர்கள் இந்த மன்றத்தின் உறுப்பினராக முடியும். 14 முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் இந்த மன்றங்களில் சேரலாம். மாணவர்கள் எண்ணிக்கைக்கு வரம்பு கிடையாது. ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்தல் கல்வியறிவு மன்றத்தில் உறுப்பினராகலாம். வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக ஒரு மாணவர் பிரதிநிதி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஒரு கன்வீனரை தேர்வு செய்ய வேண்டும். கன்வீனர் நோடல் அலுவலருக்கு உதவிகரமாக செயல்படுவார். அரசியல் அறிவியல் அல்லது சமூக அறிவியல் அல்லது பொருளியல் படித்த ஆசிரியர் மன்றத்தின் நோடல் ஆபீசராக செயல்படலாம்.
கல்லூரிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம்
கல்லூரியை பொறுத்தவரை 18 முதல் 21 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் மன்றத்தின் உறுப்பினராக சேர முடியும். உறுப்பினர் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. அரசியல் அறிவியல் பேராசிரியர் அல்லது வரலாற்று துறை பேராசிரியர் அல்லது தேர்தல் பணி அலுவலராக பணியாற்றிய பேராசிரியர் நோடல் ஆபீசராக செயல்படுவார்.
மாணவர்கள் இடையே தேர்தல் நடத்தி மூன்று பேர் கொண்ட ஒரு நிர்வாக குழுவை வாக்குப்பதிவு முறையில் தேர்ந்தெடுத்து அமைத்தல் வேண்டும். இவர்களில் ஒருவர் கன்வீனராக செயல்படுவார். கன்வீனர் நோடல் ஆபீசருக்கு தேர்தல் கல்வியறிவு மன்ற செயல்பாடுகளில் உதவிகரமாக இருப்பார்.
தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் செயல்பாடுகள்
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: வாக்களிப்பதின் முக்கியத்துவம்,வாக்காளராக வாக்கை பதிவு செய்ய வேண்டியதின் அவசியம், வாக்களிக்காமல் இருப்பதின் விளைவுகள் பற்றி மாணவர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். தேர்தல் நடைமுறைகளை புரிந்து கொள்ளுதல்: தேர்தல் நடைமுறைகள், வேட்பாளராக உரிய தகுதிகள், வாக்குப்பதிவு, நோட்டா வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை போன்ற தேர்தல் நடைமுறைகள் பல்வேறு நிலைகளை விளக்குதல்.
ஈவிஎம் மற்றும் விவி பேட் செயல்முறை விளக்கம்
தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த EVM மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் தருதல்.
தவறான கருத்துகளை நீக்குதல்: தேர்தல் குறித்த பொதுவான தவறான கருத்துகளை சரி செய்து உண்மையான தகவல்களை பரப்புதல்.
செயல்பாட்டுக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள்: வாக்காளர் பதிவு, தேர்தல் கூட்டங்கள், அரசியல் விவாதம் போன்ற பல்வேறு தலைப்புகளில் செயல்பாட்டுக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல்.
மாதிரி வாக்குப்பதிவு: உண்மையான வாக்குப்பதிவு அனுபவத்தை வழங்கிடும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல்.
விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள்: தற்கால சமூக பிரச்னைகள் குறித்து விவாதங்கள் ஏற்படுத்தி கருத்து பரிமாற்றங்களை ஊக்குவித்தல்.
விழிப்புணர்வு பிரசாரங்கள்: சுவரொட்டிகள், பேனர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்துதல் .
வாக்காளர் பதிவு இயக்கங்கள்: தகுதியான அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்ய ஊக்குவிக்கும் இயக்கங்களை நடத்துதல் .
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுதல்: தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதிகபட்ச பலனை பெறுதல்.
கிராம சபா பங்கேற்றல்: அவ்வப்போது நடைபெறுகின்ற கிராமசபா கூட்டங்களில் தேர்தல் கல்வியறிவு மன்ற மாணவர்களை பங்கேற்க செய்தல்.
அவை நடவடிக்கைகளை பார்வையிடுதல்: பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப்பேரவை, மாநகராட்சி மன்ற கூட்டங்கள், நகராட்சி மன்ற கூட்டங்கள், ஊராட்சி ஒன்றிய கூட்டங்களில் இந்த மன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று அங்கு நடைபெறுகிற நடவடிக்கைகளைப் பார்வையிடுதல்.
சுவர் ஓவியங்கள்: பள்ளி கல்லூரி சுற்றுப்புற சுவர்களில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான ஓவியங்களை வரைந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
வாக்காளர் திருவிழா: புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதையும் நகரில் உள்ள மிக மூத்த வாக்காளர் குடிமக்களுக்கு சிறப்பு செய்வதையும் கொண்டாடும் வகையில் வாக்காளர் திருவிழா கொண்டாடுதல்.
பல்வேறு திறன் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: ஓவியம், புகைப்படம் எடுத்தல், ஓரங்க நாடகம், திரைப்பட காட்சி, குறும்படம் தயாரித்தல், பாட்டு, நடனம், ஸ்லோகன் எழுதுதல், வினாடி வினா, பேச்சுப்போட்டி, விவாத மேடை, பட்டிமன்றம் , வழக்காடு மன்றம் போன்றவற்றை கல்லூரிகளுக்கு உள்ளேயும் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையேயும் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் பல்வேறு திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
FORM 6 விண்ணப்பம் நிரப்ப பயிற்சி அளித்தல்: புதிய வாக்காளராக சேர FORM 6 விண்ணப்பப் படிவம் நிரப்புவதற்கு பயிற்சி முகாம் நடத்துதல். சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு பரப்புதல்: சமூக வலைத்தளங்களில் POSTER , TAGLINE,LOGO DESIGN,BLOG CREATION போன்ற செயல்பாடுகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல்.
ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்: தேசிய வாக்காளர் தினத்தை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுதல் மற்றும் பிற முக்கிய நாட்கள் ஆன குடியரசு தினம், சுதந்திர தினம், அரசியலமைப்பு தினம், பஞ்சாயத்து ராஜ் தினம் போன்ற நாட்களில் பொருத்தமான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
நோடல் அலுவலரின் முக்கிய பணிகள் தேர்தல் கல்வியறிவு மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல். கல்லூரியில் பயிலும் தகுதியுடைய அனைத்து மாணவ மாணவியரையும் வாக்காளராக பதிவு செய்ய முகாம் நடத்துதல். தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் மூலம் செயற்குழு தேர்வு செய்தல் கன்வீனரை தேர்வு செய்தல்.
மாவட்ட தேர்தல் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு மன்றம் சிறப்பாக செயல்பட தேவையான உதவிகளை பெறுதல். மாதாந்திர, வாராந்திர செயல்பாடுகள் திட்டமிட்டவாறு முறையாக நடத்துதல். மன்ற செயல்பாடுகளுக்காக சிறப்பு விருந்தினர்களை அழைக்கும்போது எந்த ஒரு அரசியல் கட்சி சார்ந்தவரையும் அழைக்காமல் இருத்தல். ஜாதி,இன, மத,மொழி வேறுபாடு பிரித்தாளும் வகையில் பேசுபவர்களை மன்றங்களுக்கு அழைக்காமல் இருத்தலை உறுதி செய்தல் ஆகியனவாகும்.
இந்தியாவில் ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமை. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இதில் பங்கேற்க உரிமையும் பொறுப்பும் உள்ளது. எனவே, தேர்தல் கல்வியறிவு மன்றங்களை வலுவானதாகவும், செயல்பாடுகள் மிக்கதாகவும் செயல்படுத்துவோம். நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்த மன்றங்களின் பங்கு மகத்தானது என்பதால் இளம் தலைமுறையினரை பொறுப்புள்ள குடிமக்களாக அனைத்து பள்ளிகள்/ கல்லூரிகளில் இம்மன்றங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திடுவோம். அதிக வாக்கு பதிவு ஜனநாயக அமைப்பின் நியாயத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் பலப்படுத்துகிறது.
The post பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றங்கள்… appeared first on Dinakaran.