மின்சாரம் இல்லாமல் நம்மால் ஒருசில நிமிடங்கள் கூட சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு அதன் முக்கியத்துவம் உள்ளது. மின்சாரம் என்பது வற்றாத வளம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டுக்கும் வீட்டுக்கும் அதிக அளவில் செலவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் மின்சார உற்பத்தியும் ஒன்று. ஒவ்வொரு மின் நுகர்வோரும் 40 வாட்ஸ் மின் நுகர்வைக் குறைத்தால் 1000 மெகாவாட்ஸ் பற்றாக்குறையைச் சரி செய்யலாம், என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மின்சார சேமிப்பு என்பது மின்சார உற்பத்திக்குச் சமம். அந்த வகையில் நாம் மின்சார சிக்கனத்தை இளம்பிராயத்திலேயே கற்றுத் தரும் வகையில் பள்ளிகளில் /கல்லூரிகளில் ஆற்றல் மன்றங்கள் (எனர்ஜி கிளப்ஸ்) தொடங்கப்பட்டு சிறப்புற நடைபெற்று வருகிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் எனர்ஜி மேனேஜ்மென்ட் சென்டர் (ENERGY MANAGEMENT CENTRE) மையத்தால் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் எனர்ஜி திட்டத்தின் (SMART ENERGY PROGRAM) ஒரு பகுதியாக பள்ளிகள் / கல்லூரிகளில் ஆற்றல் மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆற்றல் மன்றங்கள்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.3.2024 நிலவரப்படி 1583 ஆற்றல் மன்றங்கள் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 61,877 மாணவர்கள் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு சிறப்பான செயல்பாடுகளைச் செயலாற்றிவருகின்றனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆற்றல் மன்றங்கள் தொடங்கியதின் நோக்கங்கள்
பள்ளி/ கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் ஆற்றல் திறன் இயக்கத்தில் இளம் வயதுடையோரின் பங்கேற்பை ஊக்குவித்தல், இளம் வயதினரிடையே மின் ஆற்றல் குறித்த கல்வியறிவித்தல், ஊக்குவித்தல் மற்றும் ஆற்றலைச் சேமிக்க உதவுதல், வீட்டு மின் ஆற்றல் நுகர்வு,பற்றிய இளைஞர்களின் புரிதலை மேம்படுத்துதல், ஆற்றல் சேமிப்பு, மற்றும் ஆற்றல் திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளம்பருவத்தினரை அவர்களின் வீட்டில் ஆற்றல் நுகரப்படுவதில் நடத்தை மாற்றங்களைச் செய்யத் தூண்டுதல், சமூகங்களில் நிலையான ஆற்றல் இலக்குகளை மேம்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நடைமுறைகள் பற்றி மாணவர்களுக்குக் கற்பித்தல், மாணவர்கள் பள்ளியில் மற்றும் இல்லங்களில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்பாடுகளாகச் செய்து புரிந்து உணர்தல், மாணவர்கள் அவர்களின் பள்ளிகளிலும் சமூகத்திலும் மாற்றத்தை மேம்படுத்துவதற்கு அவர்களின் கற்றலைப் பயன்படுத்தி ஊக்குவித்தல், ஆற்றல் பயன்பாட்டைப் பொறுத்து மின்சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு அணுகுமுறையைத் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகளை மாணவர்களிடம் ஏற்படுத்தவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆற்றல் மன்றங்கள் தொடங்குவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்புமுறை
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் ஒவ்வொரு ஆற்றல் மன்றத்திலும் 30 முதல் 35 மாணவர்கள் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆற்றல் மன்றங்கள் பணிகளை ஒருங்கிணைக்க ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டும். மாணவ உறுப்பினர்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களாக இருத்தல் வேண்டும். ஆற்றல் மன்றத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை, அடையாளக் குறியீடு, உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஆற்றல் மன்றத்திற்கு வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டு தகவல்கள் பரிமாறப்படும். மேலும் சேர்க்கப்பட்ட மாணவ உறுப்பினர்களில், மாணவர் பிரதிநிதிகளை ஆற்றல் மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவர் மன்றச் செயல்பாடுகளுக்காக மன்ற மாணவ உறுப்பினர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பணியை ஆற்ற வேண்டும். மாணவர் பிரதிநிதி மன்றத்திற்காக மேற்கொள்ளப்படவேண்டிய செயல்பாடுகளை மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து, ஊக்குவித்து, முறையாகச் செயல்பட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
ஆற்றல் மன்றச் செயல்பாடுகள்
*மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மாதந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்
*காற்றாலை,சூரியஒளி மின்னாற்றல் சேமிப்பு போன்ற துறைகளில் தேர்ந்த பொறியாளர்களை, வல்லுநர்களைக் கொண்டு விழிப்புணர்வு கூட்டங்கள்/செயல்முறைகள் ஏற்பாடு செய்தல்
*பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கிடையே மின்சிக்கனம் குறித்த வினாடி வினா போட்டிகள் நடத்துதல்
*துறையில் அனுபவமிக்கவர்களைக் கொண்டு விவாதங்கள் நடத்துதல்
*ஓவியம்,கட்டுரை, பேச்சு, ஸ்லோகன் எழுதுதல் போன்ற பல்வேறு திறன் போட்டிகள் நடத்துதல்
*மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல்
*மின் சிக்கனத்தை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல்
*பல்வேறு தலைப்புகளில் சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடத்துதல்
*மின் சிக்கனம் குறித்த வீடியோ படக்காட்சி திரையிடுதல்
*வீட்டு மின் ஆற்றல் தணிக்கைப் பயிற்சி மேற்கொள்ளுதல்
*சர்வதேச மாணவர் பரிமாற்றம்(மெய்நிகர்) நிகழ்ச்சி நடத்துதல்
*தேசிய எரிசக்தி பாதுகாப்புத் தினம்(டிசம்பர் 14) டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை) நடத்தப்படும். தேசிய ஆற்றல் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொருத்தமான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்
*தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாள் (ஆகஸ்ட் 20), உலக எரிசக்தி பாதுகாப்புத் தினம் (டிசம்பர் 14), உலக உயிரி எரிபொருள் தினம் (ஆகஸ்ட் 10) போன்ற முக்கியமான நாட்களில் பொருத்தமான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்
*அருகிலுள்ள மின்சார உற்பத்தி நிலையம் அல்லது மின் பகிர்மான நிலையத்திற்கு களப்பயணம் மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகளைப் பள்ளி கல்லூரிகளில் உள்ள ஆற்றல் மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைப்பாளருக்குப் பயிற்சி
ஆற்றல் மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சிகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனம்(TANGEDCO) சார்பில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆற்றல் மன்றத்தை எவ்வாறு உருவாக்குவது? மற்றும் ஆற்றல் மன்றங்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்த முழுமையான விவரங்கள் ஆற்றல் சேமிப்பு, ஆற்றல் திறன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆற்றல் மன்ற உறுப்பினர்களைச் சேர்க்கும் விதம், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் மின்சாரச் சிக்கன வார விழா கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு போட்டிகள் நடத்துவதற்கு வழி காட்டுதல் போன்ற பயிற்சிகள் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும்.
மின்சிக்கனத்தின் அவசியத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவது நமது அனைவரின் கடமையாகும். மின் சிக்கனத்தை கடைப்பிடிப்போம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வைப் பிரகாசமாக ஒளிரச்செய்வோம். ஒரு யூனிட் மின் சேமிப்பு இரண்டு யூனிட் மின் உற்பத்திக்குச் சமம். எனவே, மின்சார சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் மன்றங்களின் செயல்பாடுகளைச் சிறப்பாக வழிநடத்துவோம்!
The post பள்ளி, கல்லூரிகளில் ஆற்றல் மன்றங்களின் செயல்பாடுகள் appeared first on Dinakaran.