பல்லடம், அக். 19: பள்ளி, கல்லூரி மாணவிகளை பின்தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்லடம் அரசு கல்லூரி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்டவைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதும், மாணவிகளை பின்தொடர்வதாகவும் பல்லடம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லெனின் அப்பாதுரை, கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், மனோஜ்குமார், இசக்கி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பெண் போலீசார் ரோந்து செல்லும் பிங்க் பேட்ரோல் என்னும் புதிய திட்டத்தை போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: பல்லடத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்வதாக புகார் வந்தது. பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், இருசக்கர வாகனங்களில் மகளிர் போலீசார் ரோந்து செல்வார்கள். இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மாணவிகளுக்கு தொல்லை தரும் வகையில் நடந்து கொள்வது, மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post பள்ளி, கல்லூரி மாணவிகளை பின் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ் எச்சரிக்கை appeared first on Dinakaran.