பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி ஆவுடையாள்புரத்தில் கூடுதலாக பேருந்து நிறுத்தம்

3 months ago 12

கூடங்குளம், டிச.2: பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி ஆவுடையாள்புரத்தில் கூடுதலாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடங்குளம் அருகே விஜயாபதி ஊராட்சி ஆவுடையாள்புரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக திசையன்விளைக்கு செல்கின்றனர். பள்ளி மாணவர்கள் இடிந்தகரைக்கும், கல்லூரி செல்லும் மாணவர்கள் நாகர்கோவிலுக்கும் செல்கின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் பேருந்து நிறுத்தமும், வடக்கு பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதில் நகரப் பேருந்துகள் நின்று செல்கிறது. ஒரே ஒரு பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே விரைவு பேருந்துகள் நிற்கிறது.

தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால் ஆவுடையாள்புரம் கிராமத்தின் பரப்பளவு விரிவடைந்து விட்டது. குறிப்பாக 1 கி.மீ சுற்றளவுக்கு குடியிருப்புகள் விரிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் ஏற்கனவே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் வெகு தொலைவிற்கு நடந்து சென்று வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் தொலைவில் உள்ள வீடுகளில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று பேருந்து நிறுத்தத்திற்கு வர வேண்டி உள்ளது. காலை வேளையில் பேருந்துக்கு செல்லும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் அனைவருமே மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே ஆவுடையாள்புரம் கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக மேற்கு பகுதியில் கூடுதலாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையேற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு உடனடியாக புதிய பேருந்து நிறுத்தம் அமைத்து தருவதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

The post பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி ஆவுடையாள்புரத்தில் கூடுதலாக பேருந்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article