பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை செய்யாறு கூலித்தொழிலாளியின் மகள்

1 month ago 4

செய்யாறு, நவ.27: செய்யாறு கூலித்தொழிலாளியின் மகள் பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜமூர்த்தி- விஜி தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள். 3வது மகளான கஸ்தூரி(20) செய்யாறு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றார். தற்போது, சென்னையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் பாடப்பிரிவில் பயின்று வருகிறார். கஸ்தூரி அரசு பெண்கள் மேல்நிலைப் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு புட்பால் போட்டியில் பங்கேற்று, மாவட்ட அளவில் மாநில அளவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

குழு விளையாட்டில் விளையாடினால் தனித்து சிறப்பு பெற முடியாது என தீர்மானித்த கஸ்தூரி பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி பெற்று வந்தார். தன்னார்வலர்கள் நிதி உதவியில் மாநில அளவில் வெற்றி பெற்று இந்திய அளவில் தேர்வாகி இந்தியன் பவர் லிப்டிங் பெடரேஷன் மூலமாக உலக அளவில் நடைபெறும் பளு தூக்கும் போட்டிக்கு தேர்வானார். ஆனால் குடும்பப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டது.
பின்னர் செய்யாறு பகுதியின் பல்வேறு தன்னார்வலர்கள் உதவியுடன் ரஷ்யா நாட்டுக்கு சென்று நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்ற டபுள்யூபிபிஎல் வேர்ல்டு புரொபஷனல் பவர் லீக் பளு தூக்கும் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் பளு தூக்கி தங்கம் பதக்கம் வென்று உலகின் வலிமையான பெண் 2024 என்ற பட்டத்தையும் உலக சேம்பிமன் ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

பளு தூக்கும் போட்டியில் வென்று வந்துள்ள கஸ்தூரிக்கு செய்யாறு நகர தன்னார்வலர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், தன்னைப்போல் பின்புலம் இல்லாமல் ஏழை எளிய மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க துடித்து போதுமான உதவிகள் இன்றி திறமைகளை தங்களுக்குள்ளேயே புதைத்து வருகின்றனர். அவர்களை விளையாட்டுத்துறை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினால் தமிழகமும் இந்தியாவும் உலக அளவில் திறமைகளை வெளிப்படுத்த முடியும். விளையாட்டில் சாதிப்பதன் மூலம் நல்ல வேலை வாய்ப்பை பெற்று வாழ்வில் முன்னேற முடியும் என்றார். கூலித்தொழிலாளியின் மகள் உலக சாதனை வென்றிருப்பது செய்யாறு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை செய்யாறு கூலித்தொழிலாளியின் மகள் appeared first on Dinakaran.

Read Entire Article