பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை

1 month ago 6

நாகர்கோவில்: தசரா பக்தர்கள், பல்வேறு கடவுள் வேடங்கள் அணிந்து, காணிக்கை வசூல் செய்கிறார்கள். மிகவும் தத்ரூபமாக அணிந்துள்ள வேடம், பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா, குலசேகரப்பட்டணத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வருகிற 12ம் தேதி நளளிரவில் 12 மணிக்கு நடக்கிறது. அன்றைய தினம் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக அம்மன் எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள்வார்கள். குலசை தசராவுக்கு காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக பல்வேறு கடவுள் வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று தர்மம் எடுத்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் வேடமணிந்த பக்தர்கள் பல்வேறு ஊர்களுக்கு காணிக்கை வசூல் செய்ய செல்கிறார்கள்.

குமரி மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். விநாயகர், முருகன், சிவன், பார்வதி, மீனாட்சி, காளி, சுடலைமாடன் உள்ளிட்ட தெய்வ வேடங்களிலும், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டும் காணிக்கை பெற்று வருகிறார்கள். அந்தந்த பகுதிகளில் தசரா குழுக்கள் அமைத்து, வாகனம் ஏற்பாடு ஊர், ஊராக செல்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேடமணிந்து உள்ளனர். நாகர்கோவிலிலும் தசரா பக்தர்கள் பல்வேறு இடங்களில் காணிக்கை வசூல் செய்கிறார்கள். திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து காணிக்கை வசூலித்து வருகிறார்கள். தசரா திருவிழாவையொட்டி தற்போது குலசேகரப்பட்டணத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

The post பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை appeared first on Dinakaran.

Read Entire Article