*விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் பீதி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுகாவில் பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்டு, நகரின் மையப்பகுதியான தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கிருஷ்ணகிரி நகரில், பெங்களூரு சாலையில் நகரின் மைய பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்படும் பகுதியாக கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகம் உள்ளது.
இந்த பகுதியில், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம், சார் நிலை கருவூல அலுவலகம், வேளாண்மைத்துறை, நீர்வளத்துறை, கிளை சிறைச்சாலை, போக்குவரத்து போலீஸ் நிலையம், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இங்குள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தினமும் பல்வேறு அலுவல்களுக்காக 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலக வளாகத்தில், பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்ட டேங்கர் லாரிகள், கன்டெய்னர் லாரிகள், சரக்கு வேன்கள், டிராக்டர்கள், கார்கள் என 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மணல் திருட்டு வழக்குகள், கிரானைட் கற்கள் கடத்தல் வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த வாகனங்கள் அதே இடத்திலேயே இருப்பதால், அந்த பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மது வழக்கில் பிடிக்கப்பட்ட லாரிகளும் அங்கே நிற்பதால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. பல ஆண்டுகளாக இந்த வாகனங்கள் அந்த இடத்திலேயே இருப்பதால் பல்வேறு பணி நிமித்தமாக தாலுகா அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட லாரிகள், கார்கள், சரக்கு வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை பல ஆண்டுகளாக இங்கேயே உள்ளதால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை இங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வாகனங்களை அகற்றி, இந்த இடத்தை சீரமைக்க வேண்டும். மேலும், இந்த வளாகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு அலுவல்களுக்காக வந்து செல்கின்றனர். ஆனால், இந்த வளாகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் போன்றவை இல்லாததால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த வாகனங்களை அகற்றுவதோடு, அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மேலும், பெரும்பாலான பகுதிகளில் புதர் மண்டி கிடப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் அதிகரித்துள்ளது. அடிக்கடி இந்த வளாகத்திற்குள் உள்ள அலுவலகங்களுக்கு வரும் கலெக்டருக்கு இது போன்ற அடிப்படை வசதி இல்லாதது தெரியுமா என்பது தெரியவில்லை. எனவே, அது போன்ற அவல நிலையை போக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.