பல்லாயிரம் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்! ஹஸீனா சபீர் அலி

4 hours ago 2

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் இருக்கும் பல்வேறு தடைகள் மற்றும் கடும் சவால்களை கடந்து பல துறைகளிலும் முன்னேறி வெற்றிக் கொடியினை நாட்டி வருகின்றனர். சமத்துவத்தை நோக்கி செல்வதற்கு பல ஆண்டு காலமாக சமூகத்தில் பல முன்னெடுப்புகள் நடைபெற்றுத் தான் வருகிறது. சுயதொழில் தொடங்கு வதன் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு நிறைய முன்னேற்றத்துடன் கூடிய நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சென்னை அயனா வரம் பகுதியை சேர்ந்த ஹஸீனா சபீர் அலி. ஒரு பெண் தொடங்கும் தொழில் வெற்றியடைந்தால் அது பல பெண்கள் தொழில் தொடங்க மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார் இவர். இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், பள்ளிச் சிறுமிகள், திருநங்கைகள் என பலருக்கும் பேக்கரி பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி பல பெண் தொழில்முனைவோரை உருவாக்கி வரும் ஹஸீனா, பேக்கரி பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகள் மற்றும் முறையான பயிற்சிகள் குறித்து விளக்குகிறார்.

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

நான் படித்தது எம் எஸ்ஸி ஐடி. ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு பேக்கரி பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. எங்கள் வீட்டிற்கு தேவையானவற்றை தயாரித்து வந்தேன். எனது தந்தையின் மறைவிற்கு பிறகு அந்த ஷாக்கில் எனது வலது கை சற்று செயல்பாடு குறைய ஆரம்பித்தது. அப்போது வெளியே சென்று பணி செய்ய இயலாத நிலையில் எனக்கு தெரிந்த பேக்கரி தொழிலைச் செய்தால் என்ன என்கிற எண்ணம் ஏற்பட்டது. அப்போது கொரோனா காலகட்டத்தில் பேக்கரி பொருட்கள் ஆர்டர் வீடு தேடி வர ஆரம்பித்தது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இதற்கென தேவைகள் அதிகரிக்க பலருக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்தால் என்ன என்கிற எண்ணத்தில் தோன்றியது தான் எங்களது பேக்கரி பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகள்.

உங்களுக்கு பேக்கரி துறை குறித்த முறையான பயிற்சி மற்றும் அனுபவங்கள் உண்டா?

எனக்கு பொதுவாகவே பேக்கரி துறை மீது அதீத ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக பல்வேறு வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுத்துக்கொண்டேன். அந்த வகுப்புகளில்தான் ஒவ்வொரு பொருட்களை தயாரிப்பதற்கான நுண்ணிய நுணுக்கங்களை முறையாக கற்றுக்கொள்ள முடிந்தது. அதனைத் தான் என்னிடம் பயிற்சிக்காக வரும் மற்றவர்களுக்கு சொல்லித் தந்து வருகிறேன். இவ்வளவு ஏன் தற்போதுகூட ஏதேனும் புதிய விஷயங்களுக்காக புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, புதிய நவீன அப்டேஷன்களையும் கற்று வருகிறேன். இந்த தொழிலில் நிறைய அப்டேஷன்கள் ரொம்பவும் தேவை.

உங்கள் பயிற்சி வகுப்புகள் குறித்து சொல்லுங்கள்?

எங்களிடம் பேக்கரி பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகளில் சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை கற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகிறார்கள். பேஸிக் கேக் வெரைட்டி முதல் அட்வான்ஸ் லெவல் வரை பலதரப்பட்ட பயிற்சி வகுப்புகள் மூலமாக பலருக்கும் கற்றுத் தருகிறோம். பல பெண்கள் கரூர், திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், கோயமுத்தூர் முதலிய இடங்களில் இருந்து சென்னை வந்து கூட கற்றுக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு கேக் வகைகள், பேஸ்டரி, குக்கீஸ் , பிரட், பன், சாக்லேட், பிரௌனி, ஆர்கானிக் கேக் வகைகள் அதில் வைக்கும் டாப்பிங்ஸ் போன்ற அனைத்தையும் கற்றுத் தருகிறோம். இதுவரை நேரிடையாக ஏறக்குறைய 300 பேருக்கு மேலாக கற்றுக்கொண்டு வெற்றிகரமாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். அதே போல ஆன்லைன் மூலமாகவும் உலகெங்கும் 2000 பேருக்கு மேல் கற்றுக் கொடுத்துள்ளோம். இதில் பலரும் தற்போது மிக சிறந்த தொழில் முனைவோராக மிளிர்ந்து வருகிறார்கள். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோரை உருவாக்கி இருக்கிறோம். பள்ளிக்கூடங்கள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளுக்காகக் கூட பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறோம். ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இது மாதிரியான வகுப்புகளை ஏற்பாடு செய்து தருகிறது. ஒரு ஆர்வத்திற்காக பலரும் கற்றுக் கொள்ள வருகிறார்கள். இதில் சீரியஸாக இறங்கி வேலையை விட்டுவிட்டு தொழில்முனைவோராக மாறியவர்களும் உண்டு. அவரவர்க்கான வாய்ப்புகள் தானே வாழ்வை தீர்மானிக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் அப்பெண்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறதா?

நிச்சயமாக. நாங்கள் வெறும் பயிற்சி வகுப்புகளோடு நின்று விடுவதில்லை. அந்த பொருட்களுக்கான விற்பனை, வேலைவாய்ப்பு, தொழில்துவங்க லைசன்ஸ் பெறுவது என ஒவ்வொரு கட்டத்திலும் உதவி வருகிறோம். மேலும் எங்களுக்கு வரும் ஆர்டர்கள் அனைத்தையும் செய்து தருவது எங்கள் மாணவிகளே. அதன் மூலம் அவர்களுக்கு கணிசமாக வருமானமும் கிடைக்க வழிவகை செய்து தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் பெசன்ட் நகர் பீச் தள்ளு வண்டி கடைகள் முதல் கிளைவுட் கிச்சன் வைத்து விற்பனை செய்கிறார்கள். சிலர் தனியாகவே கேக் ஷாப் வைத்து இருக்கிறார்கள். சிலர் எங்களைப் போலவே பயிற்சி வகுப்புகள் கூட எடுத்து வருகிறார்கள். ஒரு தொழிலை கற்றுக்கொள்வது என்பது நமது வாழ்க்கை தரம் முன்னேறவும் சுயசம்பாத்தியத்தில் வாழவும் வழிவகை செய்யும். பத்து வயது குழந்தை கூட ஆர்வமாக கேக் தயாரிக்க கற்றுக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களின் மூலமாக பலரும் பயிற்சி வகுப்புகளுக்கு தற்போது வர ஆயத்தமாக இருக்கிறார்கள். அதே சமூகவலைத்தளங்களின் மூலமாகவே விற்பனைகளும் சாத்தியமாகிறது.

உங்கள் எதிர்காலத் திட்டங்கள்…

தற்போது அயனாவரம் பகுதியில் தான் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறோம். அதே போன்று சென்னையின் பல பகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அதேபோல வெளியூரிலும் நடத்த வேண்டும் என்கிற ஆர்வங்கள் இருக்கிறது. நிறைய பெண் தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும். ஒரு பெண் உயர்ந்தால் அவரது குடும்பமும் வீடும் நாடும் உயரும் சாத்தியங்கள் அதிகம். நிறைய சிறப்புக் குழந்தைகளுக்கு மற்றும் திருநங்கைகளுக்கு கேக் தயாரிக்க பயிற்சி அளித்து வருகிறோம். இன்னமும் நிறைய பகுதிகளுக்கு சென்று இது போன்ற சிறப்புக் குழந்தைகளையும், திருநங்கைகளையும் தொழில்முனைவோராக மாற்றும் எண்ணங்கள் இருக்கிறது. நிறைய NGO அமைப்புகளுக்கும் சென்று பயிற்சி வகுப்புகள் எடுக்க பேசி வருகிறோம்.

எந்த தொழிலையும் முறையான பயிற்சியுடன், திட்டமிட்டு துவங்குங்கள் வெற்றி உங்களை தேடி வரும். அதனோடு உங்கள் கற்பனைத் திறன் மற்றும் தனித்துவத்துடன் தொழிலை சிறப்பாக செய்யுங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹஸீனா. மேலும் எங்களது இந்த பணிகளுக்காக நிறைய பாராட்டுகளும் விருதுகளும் பெற்றுள்ளோம். அப்துல் கலாம் விருது, upcoming baking Ins titute விருது, ஐகானிக் விருது, பெஸ்ட் டியூட்டர் விருது, Food and beverage பிரிவில் தமிழக அளவில் இரண்டாமிடம் கிடைத்தது மகிழ்வான ஒன்று என்கிறார் பெண் தொழில்முனைவோர் ஹஸீனா சபீர் அலி.
– தனுஜா ஜெயராமன்

The post பல்லாயிரம் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்! ஹஸீனா சபீர் அலி appeared first on Dinakaran.

Read Entire Article