திருப்பூர்: பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், காதலை கைவிட மறுத்ததால் அண்ணனே அடித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (52). இவரது மனைவி தங்கமணி (48). இவரது மகன் சரவணன் (24), மகள் வித்யா (22). வித்யா கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்தார். இவருக்கும், அதே கல்லூரியில் படித்த திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி (24) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார். ஆனால் வித்யா குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி வித்யாவின் பெற்றோர் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றனர். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்தனர். இதனால் போலீசுக்கு தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் சென்றது.
இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வித்யாவின் தலைப்பகுதியில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அப்போது, வித்யாவை அடித்துக் கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசாரிடம் சரவணன் கூறியதாவது: எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை.
மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்திருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன். இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்யா ஆணவக்கொலை ெசய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் யாதவ் கூறுகையில், ‘வித்யாவின் காதலை கைவிட்டு நன்றாக படிக்கும்படி அவரது சகோதரர் சரவணன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு மேல் பேசாமல் இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகத்தான் வித்யா அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்தபோது, பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லை. வித்யாவும், வெண்மணியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே இது ஆவணக்கொலை இல்லை’ என்றார்.
The post பல்லடம் மாணவி ஆணவக்கொலையா? : எஸ்.பி மறுப்பு appeared first on Dinakaran.