பல்லடம், ஜன.23: பல்லடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தலைக்கவசம் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை உதவிக் கோட்டப் பொறியாளர் செந்தில்அரசு தொடங்கி வைத்தார். இதில் உதவிப் பொறியாளர் ஜான்சி, நெடுஞ்சாலை துறை உதவியாளர்கள், சாலைப்பணியாளர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்புராஜ், பார்த்திபன் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். பேரணியானது நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தொடங்கி தாராபுரம் சாலை, பனப்பாளையம் விவேகானந்தா பள்ளி, அரசு மருத்துவமனை,
பேருந்து நிலையம் வழியாக வந்து நிறைவடைந்தது.போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘‘வாகன விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது மிக அவசியம் ஆகும். மேலும், விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருந்தால் தலைப்பகுதியில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் தவிர்க்கப்படும்’’ என்றார். பல்லடம் நான்குசாலை சந்திப்பு சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
The post பல்லடத்தில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.