டெல்லி : பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் துணை வேந்தர் நியமன சட்டப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், “உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் மிக மிக அவசர வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அரசியல் சாசன கேள்விகள் எழும் இந்த முக்கிய வழக்கில் அவசர அவசரமாக விடுமுறை கால அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது.அரசு தரப்பு தனது நியாயமான வாதங்களை எடுத்து வைக்க உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை கால அமர்வு தனது பணி நேரத்தை தாண்டி மாலை 6.30 மணி வரை வழக்கை விசாரித்து அவசர அவசரமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்கள் பல உண்மைக்கு மாறானவை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என அரசு சுட்டிக்காட்டியதோடு, அது தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் அரசு தரப்பில் அவகாசம் கோரியபோது உரிய கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவில்லை என்றும், தற்போது துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது, இது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர். அதில்,”துணைவேந்தர் நியமன வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் தடை விதித்தது தவறானது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு, ஆளுநர் மாளிகை, யு.ஜி.சி. மற்றும் எதிர்மனுதாரர்கள் அனைவரும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The post பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.