பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்

3 weeks ago 5

* பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல்

சென்னை: பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்த 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். திமுக அரசுக்கு இந்த சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும், பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழகம் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு காரணமானவராக கண்டறியப்பட்டிருக்கிறார். புகார் கொடுத்து 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல்துறை உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்துவிட்டது. இந்த சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் முதல்வருக்கோ, திமுக அரசாங்கத்திற்கோ சிறிதளவும் கிடையாது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. ஆனால் சில ஊடகங்களில் அவர் திமுகவின் உறுப்பினர் போலவும், மாணவர் அணியில் துணை அமைப்பாளர் போலவும் செய்தி போடுகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் துணை முதல்வருடன் இருப்பது போல புகைப்படம் போட்டுள்ளார்கள். அதை பார்த்தாலே தெரியும், துணை முதல்வருக்கும் இந்த நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒன்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்றது அல்ல. அன்று ஒரு முக்கிய பிரமுகரின் மகனே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதனால் ஆட்சியாளர்களே அதனை மூடி மறைக்க முயற்சி செய்தார்கள். அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி அல்ல. அவர்கள் அப்போது பொள்ளாச்சி சம்பவத்தை மூடி மறைக்க பார்த்தார்கள். இப்பொழுதுகூட ராமேஸ்வரத்தில் அதிமுகவின் பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மருமகன் ராஜேஸ் கண்ணா என்பவர், பெண்கள் உடை மாற்றம் அறையில் ரகசிய கேமிரா வைத்து குற்றச்செயல் செய்துள்ளார். இதுபோன்ற தவறுகளை செய்வது அதிமுகவினர்தான். தவறு செய்பவர்களுக்கு திமுகவில் இடம்கொடுப்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதில் வருமாறு:
கே: திமுக உடன் தொடர்புபடுத்தி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா ?
ப: கைது செய்யப்பட்ட நபர் திமுகவின் தொண்டர் கிடையாது. அடிப்படை உறுப்ப்பினர் கிடையாது. சிலர் கூறுவது போல மாணவர் அணியிலும் கிடையாது. திமுகவிற்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கே: பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள், எப்.ஐ.ஆரில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
ப: அண்ணாமலை வேண்டுமானால் ரகசியாக கொண்டு வந்து காண்பித்து இருக்கலாம். ஆனால் அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவியின் எந்த அடையாளமும் முதல் தகவல் அறிக்கையில் தெரியப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டும் என்று எந்த வகையிலும் இந்த அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலுடன் வந்து, இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து அவராகத்தான் புகார் கொடுத்தார்.
கே: தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே.?
ப: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாலியல் சீண்டல்கள் குறைவு. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

The post பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article