இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் கதிகலங்க வைத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், தனி நாடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். பல்வேறு பிரிவினைவாத படைகள் செயல்பட்டாலும் கூட, பலூச் விடுதலை ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துடன் நீண்டகாலமாக மோதி வருகிறது. கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானும், சீனாவும் அபகரித்து வருவதாகவும், அதனால் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக பலூச் விடுதலை ராணுவம் தெரிவிக்கிறது. இந்த மோதலின் ஒருபகுதியாக குவெட்டாவில் இருந்து பெஷாவார் நோக்கி கடந்த 11ம் தேதி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்ற போது பலூச் விடுதலை படையினர் வெடிவைத்து ரயிலை தடம்புரள செய்தனர்.
பின்னர் துப்பாக்கி முனையில் ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் 500க்கும் மேற்பட்ட பயணிகளை சிறைப்பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவம் – பலூச் அமைப்புடான சண்டையில் 30 பேர் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவம் முழுவீச்சில் களமிறங்கிய போராடி 364 பேர் வரை மீட்டது. அதே நேரம் பலூச் அமைப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. இதற்கிடையே 200க்கும் மேற்பட்ட பயணிகளை, பலூச் விடுதலை ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் பணயக்கைதிகளாக அடைத்து வைத்தனர். அவர்களை அழைத்து வருவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
மேலும் பலூர் விடுதலை ராணுவத்தை அழிப்போம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் பலூச் விடுதலை ராணுவம் சார்பில், அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜியந்த் பலூச் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ஜாஃபர் ரயில் கடத்தலில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 214 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பலூச் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள 48 மணி நேரம் காலக்கெடு வழங்கியது. இது பணயக்கைதிகளின் உயிரை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக வழங்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வழக்கம்போல் பிடிவாதம் மற்றும் ஆணவப்போக்கை கடைப்பிடித்தது. பேச்சுவார்த்தையை தவிர்த்ததோடு, சூழ்நிலைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டது. இந்த பிடிவாதத்தின் விளைவாக 214 பணயக்கைதிகளும் தூக்கிலிடப்பட்டனர். நாங்கள் எப்போதும் சட்டத்தின்படி தான் நடப்போம். பாகிஸ்தானின் பிடிவாதம் தான் எங்களை இப்படி செய்ய கட்டாயப்படுத்தியது. எங்களது தரப்பில் மஜீத் படைப்பிரிவைச் சேர்ந்த ஐந்து ஃபிதாயின்கள் உட்பட 12 முஜாஹிதீன்கள் பலியாகினர். பாகிஸ்தான் ரயிலை கடத்திய சம்பவத்திற்கு ‘ஆபரேஷன் தர்ரா-இ-போலான்’ என்று பெயரிட்டுள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
பலூச் விடுதலை ராணுவத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் 214 பேர் தூக்கிலிடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அரசு, பலூச் விடுதலை ராணுவத்தின் அறிவிப்பை ஏற்கவில்லை. சிறை பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் அனைவரும் உயிரோடு தான் இருப்பதாக பாகிஸ்தான் அரசு நம்புகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரிப் சவுத்ரி கூறுகையில், இதுவரை 354 பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற பணயக்கைதிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பாகிஸ்தான் தரப்பில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 21 ராணுவ வீரர்கள் 3 ரயில்வே ஊழியர்கள், 5 பயணிகள் அடங்குவர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பலூச் விடுதலை படை விடுத்த 48 மணி நேர கெடு முடிந்ததால் 214 பணயக்கைதிகளும் தூக்கிலிட்டு கொலை: பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்தில் திருப்பம் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.