சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்: வானில் ‘பறக்க’ போகும் வறட்சி மாவட்டம்; மீன்பிடி தொழில் மேம்படும்; ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் ; தென் தமிழகத்துக்கு ஜாக்பாட்; மக்கள் உற்சாகம்

8 hours ago 3

வரலாற்று சிறப்புமிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியமானதாக உலக புகழ்பெற்ற ஆன்மிக புண்ணிய தலமான ராமேஸ்வரம் விளங்குகிறது. வியக்க வைக்கும் கட்டிட கலைகள், சிற்பங்களுடன் கூடிய தேசிய சுற்றுலாதலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கும், அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட கோயிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடவும் பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

* சுற்றுலா உலகின் சொர்க்கம்
நாட்டின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ள அரிச்சல்முனை, தனுஷ்கோடி புரதான சின்னம், வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலம், புதிய ரயில் தூக்குப்பாலம், குந்துக்கால் விவேகானந்தர் மண்டபம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடம் போன்றவை ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளதால் தேசிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதுதவிர ராமநாதபுரம் சேதுமன்னர்களின் பாரம்பரிய ராமலிங்கவிலாசம் அரண்மனை, ஒற்றைக்கல் பச்சை மரகதநடராஜர் சிலை, தென்னிந்தியாவின் முதல் சிவன் தலமான ஆதி சிதம்பரம் எனப்படும் திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில், தேவிப்பட்டினம் நவபாஷாணம், வைணவத் தலங்களில் சிறப்பு பெற்ற திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயில், ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கும், தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காடுகள், அரியமான் பீச், குருசடைதீவு, ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை என சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியாக ராமநாதபுரம் மாவட்டம் திகழ்கிறது.

* மீன்பிடி தொழிலில் 10 ஆயிரம் கோடி
ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம், பனை, தென்னை, மீன்பிடி, உப்பளம் ஆகிய முக்கிய தொழில்களும் ஒருங்கே அமைந்த சிறப்புமிக்க மாவட்டமாக உள்ளது. மற்ற மாவட்டங்களை விட இங்கு அதிக அளவில் மீன்பிடி தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை ஒன்றிய அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது. சீலா மீன் உள்ளிட்ட சில அரிய வகை மீன்கள், ஏற்றுமதி நண்டு வகைகள், இறால், சிங்கி, கடல்பாசி, சங்குவகைகள் உள்ளிட்ட கடல்சார் உணவு மற்றும் கடல்சார் பொருட்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் கடல் தொழில் அந்நிய செலாவணி ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் முண்டு (குண்டு) மிளகாய் உள்ளிட்ட முக்கிய வேளாண் பொருட்களுக்கு பல்வேறு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. மாவட்டத்தில் பனைத்தொழிலும் பிரபலம். இங்கு தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனைஓலை கைவினைப்பொருட்கள், நார் உள்ளிட்ட பனைப்பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை, பனை நார், ராணுவ தளவாட பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்துவதால், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* 120 முதல் 400 கி.மீ அலைச்சல்
ராமநாதபுரம் மாவட்டம் எப்போதும் வறட்சி மாவட்டம் என்று அழைக்கப்படும். இந்த மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் பெரிதாக ஏதுவும் இல்லை. கடல் சார்ந்த தொழில்கள்தான் உள்ளன. இதனால், மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு அதிகளவு இளைஞர்கள் சென்று வருகின்றனர். ராமேஸ்வரம், கீழக்கரை, தொண்டி, பெரியபட்டினம், ராமநாதபுரம், சாயல்குடி என மீன்பிடி துறைமுகங்களும் அதிகளவு உள்ளன. எனவே, இந்த மாவட்டத்திற்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி, இம்மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் பல்வேறு தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் சென்று வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இவர்கள் விமான நிலையம் செல்ல சுமார் 120 கிமீ முதல் 400 கிமீ வரை பயணித்து மதுரை, திருச்சி, சென்னைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைந்தால் சுற்றுலா மற்றும் சரக்கு விமானம் மூலம் மாவட்டம் தொழில் வளர்ச்சி அடைய நல்ல வாய்ப்பு உருவாகும். மேலும், ராமேஸ்வரத்திற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும் பெரும் உதவியாக இருக்கும். இதனால் விரைவுப்பயணங்கள் அதிகரித்து, தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் கூடும்.

* முதல்வருக்கு நன்றி
ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கூறுகையில், ‘‘பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஏற்கனவே, தேவிப்பட்டிணம் முதல் பாம்பன், ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல்களை பயன்படுத்தி 3 மணி நேர கால நிர்ணயத்தில் சுற்றுலா சேவையை துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளூர் பகுதி மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும். பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மேம்படும், பொருளாதார மதிப்பு கூடும். அந்நிய செலாவணி ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் அரசிற்கும் வருவாய் பெருகும் வாய்ப்புள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டத்திற்கு குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய திட்டங்களை முதல்வர் தந்து கொண்டிருக்கிறார். இதற்காக மாவட்ட மக்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி’’ என்றார்.

* ஏமாற்றிய ஒன்றிய அரசு
உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்படும். அதில் ராமநாதபுரத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளாகியும் இன்று வரை முதற்கட்ட பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

* ராமேஸ்வரத்தில் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் சுற்றுலா மேம்படும்.
* நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளூர் பகுதி மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும்.
* பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மேம்படும், பொருளாதார மதிப்பு கூடும்.
* அந்நிய செலாவணி ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் அரசிற்கும் வருவாய் பெருகும் வாய்ப்புள்ளது.

The post சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்: வானில் ‘பறக்க’ போகும் வறட்சி மாவட்டம்; மீன்பிடி தொழில் மேம்படும்; ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் ; தென் தமிழகத்துக்கு ஜாக்பாட்; மக்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Read Entire Article