மதுரை: மதுரை, தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நகரின் முக்கியப் பகுதியான தல்லாகுளம், கோ.புதூர், மூன்றுமாவடி, கோரிப்பாளையம் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மதுரை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தேனி;
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் காலை, மாலை நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தேனி மாவட்டத்தில் கருமேகம் சூழ்ந்து மழை பரவலாக பெய்தது. தேனியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. தீபாவளி பொருள்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் விற்பனைக் கடைகளில் ஒதுங்கினர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆண்டிபட்டி;
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வழியாக போடி-மதுரை அகலரயில் பாதை செல்கின்றது. இதில், ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோவிலுக்கு செல்லும் வழி, ஏத்தக்கோவில் செல்லும் வழி, மேக்கிழார்பட்டிக்கு செல்லும் வழி ஆகிய இடங்களில் ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு ஆண்டிபட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால், ரயில்வே பாலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாலத்தை கடந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீதிமன்றம், தனியார் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். பொதுமக்கள் பிச்சம்பட்டி சாலை வழியாக சென்று, கண்மாய் வழியாக சுற்றி செல்கின்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை ஊழியர்கள் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி-ஏத்தக்கோவில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 100.6 மிமீ மழை பதிவானது.
வால்பாறை;
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று திடீரென கன மழை பெய்தது. மழையால் வால்பாறை பூங்கா அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், நேற்று மாலையில் இருந்து மீண்டும் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று அதிகாலை கனமழையாக பெய்தது. மழையால் கடும் குளிர் மற்றும் மூடுபனி நிலவி வருகிறது. மழை காரணமாக அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
The post பலத்த இடி, மின்னலுடன் மதுரை, தேனியில் கொட்டி தீர்த்தது மழை appeared first on Dinakaran.