பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணதிர பழநி, திருச்செந்தூரில் தைப்பூசம் கோலாகலம்: அலகு குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடன்

2 hours ago 1

பழநி: பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க பழநி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. பழநியில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இங்கு நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா பிப். 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு வள்ளி – தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 11.45 மணிக்கு மேல் மீன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.45 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக வள்ளி – தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரத வீதிகளில் உலா வந்தனர். கோயில் யானை கஸ்தூரி பின்தொடர, லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தேர் நிலைக்கு வந்தவுடன் தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டத்தின் காரணமாக நேற்று முன்தினம் முதலே பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர். இதனால் நகரம் முழுவதும் பச்சை, காவி உடை உடுத்திய பக்தர்களின் தலைகளே தென்பட்டன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் ஆடிய காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது.

வின்ச், ரோப்கார் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம் – பழநி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பழநி வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

பாதயாத்திரை பக்தர்களுக்கு வழிநெடுகிலும் ஏராளமான தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. தைப்பூச திருவிழா நாட்களில் சூரிய வழிபாடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக பழநி நகரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று காலை சூரிய உதயத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடும்பன் குளம், கிரிவீதிகளில் நின்று கிழக்கு திசை நோக்கி சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர்: முருகனின் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்றார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவாக கோயில் சேர்ந்தார். விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து விரதமிருந்து பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்த பக்தர்கள், நேற்று அதிகாலை நடை திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோயில் கிரிப்பிரகாரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மற்றும் அடிப்பிரதட்சணம் எடுத்தனர்.

அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடியும், வேல் காவடி, பன்னீர் காவடி, கரும்புத்தொட்டில் காவடி, மயில் காவடி, மலர் காவடி, தேன் காவடி, அலகு குத்தி காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். சிறு குழந்தைகள் முருகர் வேடமணிந்து வந்து முருகனை வழிபட்டனர். தை பூசத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து நேற்று காலை திருச்செந்தூருக்கு சென்ற ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு ரயில் இயக்கப்படாததால் பக்தர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். இதேபோல் அறுபடை வீடு உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

* வடலூர் தைப்பூச பெருவிழாவில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம் வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில், 154வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. மனிதன் இறைவனை காண மனதில் இருக்கும் எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விளக்கும் வகையில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்பு திரை என 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

தரிசனத்தின் போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திர ஒலியை ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஒலித்தனர். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் இன்று காலை 5.30 மணி என 6 காலங்களில் திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்தும் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர். அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், பொது மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை இயக்குனர் டாக்டர் ஜெயராஜ மூர்த்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணதிர பழநி, திருச்செந்தூரில் தைப்பூசம் கோலாகலம்: அலகு குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Read Entire Article