பல மாகாணங்களில் மோசமான வானிலை அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதி புயல், காட்டுத்தீ: 5 பேர் பலி; 2 லட்சம் பேர் பாதிப்பு

4 hours ago 3

ஓக்லஹோமா சிட்டி: அமெரிக்காவில் ஒரே நேரத்தில் பல சூறாவளிகள், புழுதிப் புயல், காட்டுத் தீ என மோசமான வானிலை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் மோசமான வானிலை நிலவுகிறது. அங்கு பொதுவாக மார்ச் மாதத்தில் சுழல், சூறாவளி, புழுதிப் புயல், பனிப் புயல்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், மிசோரி மாகாணத்தில் நேற்று முன்தினம் 5க்கும் மேற்பட்ட இடங்களில் வானுயர சுழல் காற்று வீசியது. செயின்ட் லூயிஸ் பகுதியிலும் சுழல் காற்று ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த சுழல் காற்றுகள் கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி அமெரிக்காவின் தெற்கு பகுதிக்கு நகரும் என்றும் அப்போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் குளிர் நிலவும் வடக்குப் பகுதிகளில் பனிப்புயலும், வறண்ட பகுதிகளில் காட்டுத்தீயின் வேகமும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெக்சாசின் பன்ஹான்டில் உள்ள அமரில்லோ கவுண்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட புழுதிப் புயல் காரணமாக கார் விபத்துகளில் 3 பேர் பலியானதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடும் புழுதிப் புயல் காரணமாக சாலைகளில் வாகனங்கள் தெரியாததால் 38 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

மிசிசிப்பி மற்றும் அலபாமாவில் ஞாயிறு வரை சூறாவளி காற்று நீடிக்கும் என்றும் கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதே போல, டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ், மிசோரி மற்றும் நியூ மெக்ஸிகோவில் வறண்ட சமவெளிகளில் புயலால் காட்டுத்தீ பரவும் வேகம் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான வானிலை காரணமாக டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர்.

The post பல மாகாணங்களில் மோசமான வானிலை அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதி புயல், காட்டுத்தீ: 5 பேர் பலி; 2 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article