பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: காற்றால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு

1 month ago 9


நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் பெரும்பான்மையான பகுதிகளில் 5 மணி நேரத்துக்கு மேல் நேற்று அதிகாலை வரை மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. கோடை காலம் முடிந்த நிலையிலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வெயில் கடந்த 3 மாதங்களாக வாட்டி வதைத்தது. பொதுவாக அக்னி நட்சத்திர காலங்களில் மட்டும் தான் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டுவது வழக்கம். ஆனால் கடந்த ஓரிரு வாரங்களாக நெல்லை மாவட்டத்தில் 103 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை தகவல்கள் தெரிவித்தன. கடந்த இரண்டு நாட்களாக நண்பகலில் வெப்பநிலை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் 9.30 மணிக்கு பலத்த இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையும், காற்றும் ஒரு சேர இருந்ததால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மகாராஜநகர், ஹைகிரவுண்ட் சாலை, பாளை. அரசு மருத்துவமனை பகுதிகளில் பல இடங்களில் இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அந்த பகுதிகளில் மின்வாரிய லைன்கள் அறுந்து விழுந்தன. எனினும் கொட்டும் மழையிலும் மின் வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இரவு 12 மணி வரை இடி, மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. வழக்கத்தை விட இடியும், மின்னலும் அதிகம் இருந்ததால் கயத்தாறு, மணப்படை வீடு ஆகிய இடங்களில் மின்கருவிகளில் பழுது ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, மகாராஜநகர், ஹைகிரவுண்ட் மருத்துவமனை, வி.எம். சத்திரம், கேடிசி நகர், வண்ணார்பேட்டை, கிருஷ்ணாபுரம், கோட்டூர் ரோடு, பாளை மார்க்கெட், என்ஜிஓ காலனி, முன்னீர்பள்ளம், தருவை, சேரன்மகாதேவி வரை பெரும்பான்மையான இடங்களில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.

சில இடங்களில் மின்சப்ளை சீராக அதிகாலை 8 மணி ஆனது. மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் நெல்லை மாநகராட்சி குடிநீரேற்று நிலையங்களில் மின் மோட்டார் இயக்க முடியவில்லை. போலீஸ் கமிஷனர் பங்களா, டிஐஜி பங்களா, மாவட்ட வருவாய் அலுவலர் இல்லம் அமைந்துள்ள ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் டிஆர்ஓ குடிநீரேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு மின் விநியோகம் சீரான பின்னரே மின் மோட்டார் இயக்கப்பட்டு குடிநீர் சப்ளை சீரானது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 84 மிமீ மழை பதிவானது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, பாளை. மார்க்கெட், நெல்லை கமிஷனர் அலுவலகம் எதிரேயுள்ள பார்வையற்றோர் பள்ளி சாலை, சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கிக் கிடந்தது.

பாளையங்கோட்டை ஆயுதப்படை எதிரேயுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் முழுவதும் அந்த பகுதி சாலைகளில் வெளியேறியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: அம்பை-40.40 மிமீ, சேரன்மகாதேவி- 29.60, மணிமுத்தாறு- 23.80, நாங்குநேரி-16, பாளையங்கோட்டை-84, பாபநாசம்-40, ராதாபுரம்-21, நெல்லை-49, சேர்வலாறு அணை- 35, கன்னடியன் அணைக்கட்டு-37.40, களக்காடு- 10.40, கொடுமுடியாறு அணை-4, மூலைக்கரைப்பட்டி- 25, நம்பியாறு அணை-10 மிமீ. மாஞ்சோலையில் 15 மிமீ, காக்காச்சியில் 18 மிமீ, நாலுமுக்கு 26 மிமீ, ஊத்து 21 மிமீ மழையும் பதிவானது. தென்காசி மாவட்டத்தில் மழை அளவு: கடனா- 43 மிமீ, ராமநதி-36, கருப்பாநதி-67.50, குண்டாறு-46.80, அடவிநயினார்- 35, ஆய்க்குடி-42, செங்கோட்டை- 48.40, தென்காசி- 42, சங்கரன்கோவில்- 2, சிவகிரி-4 மீமீ.

இந்நிலையில் நெல்லையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பலத்த இடி, மின்னல் காற்றுடன் 30 நிமிடத்திற்கும் மேலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை, சமாதானபுரம், ஹைகிரவுண்ட், தியாகராஜநகர், விஎம் சத்திரம், மகாராஜநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக மழை பெய்தது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (அக்.1ம் தேதி) முதல் 3ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளின் நிலவரம்
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 251 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1004 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 102.59 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 29.33 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 15.50 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.12 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 17.75 அடியாகவும் உள்ளது.

ராதாபுரத்தில் 9 மிமீ
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மணிமுத்தாறில் 3.20 மிமீ, ராதாபுரத்தில் 9 மிமீ மழை பதிவானது.

The post பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: காற்றால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article