பல கோடிக்கு சொத்து குவிப்பு; அதிமுக மாஜி அமைச்சர், எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: திருவண்ணாமலை, உசிலம்பட்டியில் விஜிலென்ஸ் அதிரடி

3 hours ago 1


சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பல கோடிக்கு சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது 2 மகன்களின் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தினர். இதில் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நகைகள், 10 வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டிலும் சோதனை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராகவும் இருந்தார். அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்து வைத்துள்ளதாக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதேபோல், கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேவூர் ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அளித்த, சொத்து மதிப்பு பட்டியலை விட, 2021ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து பட்டியலின் மதிப்பு பல கோடிக்கு உயர்ந்திருந்தது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இந்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2016-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 125 சதவீதம் (ரூ.8 கோடி) சொத்து சேர்த்தது தெரியவந்தது.

இதையடுத்து, சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் வேலூர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், மைதிலி தலைமையிலான 20 பேர் கொண்ட 3 குழுவினர் நேற்று காலை 7 மணி அளவில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதேபகுதியில் உள்ள அவரது மகன்களான சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், அனைவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து சோதனை நடத்தினர்.

சோதனையை கேள்விபட்டு சேவூர் ராமச்சந்திரன் வீட்டிற்கு முன் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ்குமார் வீட்டில் நேற்று மாலை 5.45 மணிக்கு ரெய்டு முடிந்தது. அங்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 10 வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து சேவூர் ராமசந்திரன், மற்றொரு மகன் விஜயகுமார் ஆகியோர் வீட்டில் இரவு 8.10 மணிக்கு சோதனை முடிவடைந்தது. அவர்களது வீட்டில் இருந்து ரூ.6.25 கோடிக்கு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எம்எல்ஏ ராமச்சந்திரன் அவரது மனைவி மணிமேகலை மற்றும் மகன்கள் உட்பட 4 பேரிடமும் விஜிலென்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மகன்களிடம் நீண்ட நாட்களாக பணிபுரியும் டிரைவர்களின் வங்கி கணக்குகள் விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அதில் கிடைத்த தகவல்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஜி எம்எல்ஏ வீட்டிலும் சோதனை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் பா.நீதிபதி. இவர் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். அப்போது வருமானத்தை விட அதிகளவில் சொத்து சேர்த்துள்ளதாக கண்ணன் என்பவர், கடந்த 2020ல் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து மாஜி எம்எல்ஏ நீதிபதி, அவரது மனைவி ஆனந்தி, மகன் இளஞ்செழியன் ஆகிய 3 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.  இதுதொடர்பாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று காலை உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள மாஜி எம்எல்ஏ நீதிபதி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தகவலறிந்து அதிமுகவினர் நீதிபதி வீட்டின் முன்பு கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 4 மணி வரை சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந்த சோதனையின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிபதி வீட்டில் இருந்து சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். 2011 முதல் 2016வரை தஞ்சை அதிமுக எம்எல்ஏவாக இருந்த, தற்போதைய அமமுக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சொத்து வாங்கி குவித்தது எப்படி? சேவூர் ராமச்சந்திரன் பேட்டி
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்றிரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 2016 முதல் 2021 வரை நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டிலும், எனது 2 மகன்கள் வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தேன். அதன் அடிப்படையில் சோதனையை முடித்தனர். சோதனையின்போது எனது குடும்ப செலவிற்காக எனது மனைவி ரூ.11,500ம், நான் ரூ.4,500ம் வைத்திருந்தோம். அதனை அவர்கள் திரும்ப கொடுத்துவிட்டனர்.

என்னுடைய 2 மகன்கள் திருமணத்தின்போது வழங்கப்பட்ட மொய், பரிசு பொருட்களான வெள்ளி மற்றும் சில்லரை பொருட்கள் 10 கிலோ இருந்தது. அதையும் திருப்பி கொடுத்துவிட்டனர். என்னுடைய 2 மருமகள்கள், மனைவி, தாயார் என 4 பேரிடமும் கிட்டத்தட்ட 80 கிராம் தங்க நகை இருந்தது. அதையும் திருப்பி கொடுத்துவிட்டனர். நான் 2016க்கு முன்பு ஒப்பந்ததாரராக இருந்தபோது, சம்பாதித்து சொத்துக்கள் வாங்கி வைத்திருந்தேன். அந்த ஆவணங்களை தற்போது எடுத்து சென்றுள்ளனர். 2016க்கு பிறகு நான் வருமானத்துக்கு அதிகமாக எந்த சொத்தையும் வாங்கி குவிக்கவில்லை. என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றார்.

The post பல கோடிக்கு சொத்து குவிப்பு; அதிமுக மாஜி அமைச்சர், எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: திருவண்ணாமலை, உசிலம்பட்டியில் விஜிலென்ஸ் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article