பல ஆண்டுகால போராட்டத்தை கடந்து ஆதார் அட்டை பெற்ற இருளர் இன மக்கள்: அரசின் நலத்திட்டங்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்பு

8 hours ago 2

காஞ்சிபுரம்: பழங்குடியின மக்கள் என்னும் இருளர் மக்கள் இன்னும் இருட்டில் வாழும் நிலை மாறவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏரிக்கரைகளிலும், நீர் நிலைகள் அருகிலும் இருளர் பழங்குடியின மக்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசிப்பதால் அரசின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் முறையாக பெற முடிவதில்லை. இதனால் அரசின் திட்டங்கள் இவர்களை முழுமையாக சென்றடைவதில்லை.

அவர்களின் வாழ்வியல் நிலை பண்படாத நிலம்போல கிடக்கிறது. இப்போது மத்திய, மாநில அரசுகள் எந்த திட்டமாக இருந்தாலும் ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் கூட ஆதார் கட்டாயம் என்பதால் ஆதார் கார்டு, ஜாதி சான்றிதழ் பெறுவதிலும் காலம் காலமாக இருளர் இன மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் மனிதர்கள் தானே இந்த வாழ்வு அவர்களுக்காகவும் பாதை அமைத்துள்ளது என்பதை யாரும் உணர்வது இல்லை, என்ற சூழ்நிலை தான் உள்ளது.

குழந்தைகள் கண்காணிப்பகம் என்ற தனியார் நிறுவனம் அவர்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஆதார் அட்டையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அனைதிற்கும் ஆதார் கட்டாயம் என்றாகிவிட்ட பிறகும் ஆதார் அட்டை இல்லாமல் நூற்றுக் கணக்கான பழங்குடியின மக்களும், அவர்களின் குழந்தைகளும் பரிதவிக்கின்றனர். வயது முதிர்ச்சி, பிறப்பு சான்று, அடிப்படை ஆவணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை, இடம் விட்டு இடம் பெயர்தல் போன்ற பல்வேறு சமூக பொருளாதார காரணங்களால், இவர்களால் ஆதார் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை பெற முடியவில்லை.

பெரியவர்கள் நிலை இது என்றால் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய குழந்தைகள் நிலைமை படு மோசமாக உள்ளது, குழந்தைகள் வீட்டிலியே பிறந்து விட்டால், எந்த கிராமத்தில் பிறந்ததோ அந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் அக்குழந்தை பிறப்பு குறித்தும், ஆண், பெண் என்ற விவரம், பிறந்தநாள், இடம், நேரம், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்து விடவேண்டும் அவ்வாறு செய்யத் தவறி விட்டால் மீண்டும் பதிவு செய்ய முடியாது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இவர்களின் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாமலே விட்டு விடுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை பிறந்தநாள் அக் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்படுகிறது, ஆனால் அந்த குழந்தைகளுக்கும் இவர்கள் பிறப்பு சான்றிதழ் வாங்காமல் விட்டு விடுகின்றனர், காரணம் மருத்துவமனையில் இருந்து செல்லும் போது டிஸ்சார்ஜ் சம்மரி மற்றும் குழந்தையின் நிலை, மருந்து வழங்கிய விவரம் மற்றும் தடுப்பூசி விரங்கள் அடங்கிய ஒரு குறிப்பேடு வழங்குகிறது மருத்துவமனை நிர்வாகம். இவ்வாறு தரும் எந்த ஆவணகளையும் இவர்கள் பாதுகாத்து வைத்திருப்பதில்லை

மேலும் இவர்கள் போதிய கல்வியறிவு, விழிப்புணர்வு இல்லாததால் அக்குழந்தை பிறந்த விவரத்தை வேறு எங்கும் குறித்து வைப்பதில்லை, இதனால் குழந்தைகள் வளரும்போது பள்ளிக்கு செல்லும்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், பின்நாளில் இவர்களால் பிறப்பு சான்றிதழ் அவ்வளவு எளிதாக பெற முடிவதில்லை.மேலும் பிறப்பு சான்றிதழ் இல்லாமலே பல பழங்குடி குழந்தைகள் உள்ளனர்.

இவ்வாறு அடிப்படை ஆவணங்கள் இல்லாமல் அரசு திட்டங்களை பெற முடிவதில்லை, இப்படிப்பட்ட மக்களை கண்டறிந்து, ஆதார் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெருவதற்கு வழிகாட்டி வருகிறது காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் நிறுவனம். அந்நிறுவனத்தின் வழி காட்டுதலில் சமீபத்தில் செவிலிமேடு ஏரிகரையில் வசிக்கும் எட்டு நபர்களுக்கும், ஒழையூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கும், காவாந்தண்டலம், காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் இரண்டு நபர்களுக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பழங்குடி மக்களுக்கு ஆதார் வழங்க நடவடிக்கை எடுத்து வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் நிர்வாகி ராஜ் கூறியதாவது, ‘பெரும்பாலும் இருளர் பழங்குடி மக்கள் ஒரு இடத்தில் நிரந்தரமாக வாழ முடியாத காரணத்தால் அவர்கள் ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அதில் குறிப்பாக ஜாதி சான்றிதழ் என்பது இன்னும் எவ்வளவோ மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அதனைப்பெற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். ஆவணங்களை தயார் செய்து சென்னையில் உள்ள ஆதார் அலுவலகம் சென்று அதிகாரிகளுக்கு இவர்களுடைய நிலைமையை புரிய வைத்து தற்போது ஒரு சிலருக்கு இருக்கின்ற ஆவணங்களை வைத்து ஆதார் பெற்றுள்ளோம். இதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் ஆவணங்கள் தயார் செய்து ஆதார் பெற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

The post பல ஆண்டுகால போராட்டத்தை கடந்து ஆதார் அட்டை பெற்ற இருளர் இன மக்கள்: அரசின் நலத்திட்டங்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்பு appeared first on Dinakaran.

Read Entire Article