
கோவை,
வனப்பகுதி மற்றும் இயற்கை எழில் சூழலோடு இணைந்து வாழும் வனவிலங்குகள் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்வதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வனத்துறை சார்பில் மேட்டுப் பாளையம் வனச்சரகத்தில் பர்லியாறு-கல்லாறு இடையே 3½ கி.மீ. தூரத்திற்கு குறிப்பிட்ட கட்டணத்துடன் மலையேற்ற பயணம் (டிரெக்கிங்) கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
அதன்படி மலையேற்ற பயணம் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெறும். காலை 9 மணி, 11 மணி என 2 முறை அழைத்து செல்லப்படுவார்கள். அதாவது சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லாறு வனத்துறை சோதனைச்சாவடிக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து பர்லியாறுக்கு அழைத்து செல்லப்பட்டு மலையேற்றம் தொடங்கும்.
மலையேற்றத்தின் போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பழங்குடியின மக்களில் 4 ஆண்கள், 4 பெண்கள் உடன் வருவார்கள். இந்த மலையேற்ற பயணத்தின்போது ஆர்ப்பரித்து பாய்ந்தோடும் கல்லாறு, வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இதனால் கட்டணம் செலுத்தி ஏராளமான சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ அபாயமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் வரை மலையேற வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.