பர்கூர் மலை கிராமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்; ஸ்ரீமலை மாதேஸ்வரசாமி கோயில் குண்டம் திருவிழா: படைக்கலன்களுடன் பூசாரிகள் நேர்த்திக்கடன்

9 hours ago 2

அந்தியூர்: பர்கூர் மலை கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீமலை மாதேஸ்வரசாமி கோயில் குண்டம் திருவிழா இன்று விமரிசையாக நடந்தது. படைக்கலன்களுடன் குண்டம் இறங்கி பூசாரிகள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் தமிழக- கர்நாடக மாநில பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள உள்ள பர்கூர் மலை தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைக்கிராமமான துருசனாம்பாளையம் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கர்நாடக மாநிலம் ஸ்ரீமலை மாதேஸ்வரசாமி வகையறா சுவாமிகள் சங்கமிக்கும் மகா பெரிய குண்டம் திருவிழா நேற்று (திங்கள்) துவங்கியது.
இதில் கர்நாடக மாநிலத்திலிருந்து ஸ்ரீமலை மாதேஸ்வரசாமி, அரபுகரை ஸ்ரீகம்பாள சித்தேஸ்வர ஸ்வாமி, சுள்வாடி ஸ்ரீ பிரம்மேஸ்வர ஸ்வாமி, நெல்லூர் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமி மற்றும் தமிழக அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதிக்கு உட்பட்ட தேவர்மலை ஸ்ரீ பந்தேஸ்வர ஸ்வாமி, மாக்கம்பாளையம் ஸ்ரீ பத்ரகாளியம்மன், சுண்டப்பூர் ஸ்ரீ வீரபத்திரசுவாமி, பாலவாடி ஸ்ரீசித்தேஸ்வர ஸ்வாமி, தாமரைக்கரை வீரபத்திரசுவாமி ஆகிய தெய்வங்களின் உற்சவமூர்த்திகள் அழைத்து வரப்பட்டு விடிய விடிய அனைத்து உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 9 கோவில்களின் தர்மகர்த்தாக்கள், பூசாரிகள் கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூடிய படைக்கலங்களுடன் மோளதாளம் முழங்க குண்டம் இறங்கினர். ஒவ்வொரு மாதேஸ்வரா கோயிலை சேர்ந்த படைக்கல பூசாரிகள் தங்கள் படைக்கலங்களுடன் பக்தர்களுக்கு சிறப்பு காட்சி அளித்து அருள் பாலித்தனர். சிலர் தரையில் விழுந்து படுத்து கொண்டவர்கள் மீது படைக்கலன்களுடன் தாண்டி அருளாசி வழங்கினர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குண்டம் திருவிழாவில் பங்கேற்க தமிழக, கர்நாடகா எல்லை யில் அமைந்துள்ள மலை கிராமங்களான பர்கூர், குன்றி, கடம்பூர், கத்திரி மலை, தாளவாடி, ஆசனூர், திம்பம், அந்தியூர் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட சாம்ராஜ்நகர், புளிஞ்சூர், ராமாபுரம், ஹனூர், மைசூர், கொள்ளேகால் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி, எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் தமிழக மற்றும் கர்நாடக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post பர்கூர் மலை கிராமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்; ஸ்ரீமலை மாதேஸ்வரசாமி கோயில் குண்டம் திருவிழா: படைக்கலன்களுடன் பூசாரிகள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Read Entire Article