பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுகவினர், மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: தலைமை கழகம் வேண்டுகோள்

3 months ago 18

சென்னை: “பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட மாவட்ட-ஒன்றிய-பகுதி-வட்ட திமுக செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்களது குறைந்தபட்சத் தேவைகளைத் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குடிநீரைத் தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்வதோடு, தேவையான மருந்து மாத்திரைகளையும் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும். செல்போன்கள், லேப்டாப், பவர் பேங்க் இருப்பின் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது. ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம்.

பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் திமுகவும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என திமுக உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழைக்காலத்தில் திமுகவினர், அரசு-பொதுமக்கள்-தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும்-தன்னார்வலர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள், மழை தொடர்பாக தெரிவிக்கின்ற தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு திமுக நிர்வாகிகள் வழிவகை செய்யலாம்.

குறிப்பாக, களத்தில் தன்னார்வலர்களுடன் கை கோர்த்து, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கான தலையாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.

குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். மீட்புப்பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதை உறுதிசெய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுகவினர், மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: தலைமை கழகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article