பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் அறிவுரை

3 months ago 17

சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மானிகை வளாகத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள மண்டல கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், ஆணையர் குமரகுருபரன் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்திட வேண்டும். மழை நேரத்தில் மக்கள் தங்குவதற்காக தயார்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் மற்றும் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் மின்வசதி, குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், அனைத்து அம்மா உணவகங்கள் என மக்களுக்கு தேவையான உணவினை சமைத்து வழங்குகின்ற வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, மக்களுக்கு உணவை வழங்குவதற்காக உரிய வாகனங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும், தகவல் தொடர்பிற்காகவும், கையடக்கக் கணினிகள் உரிய மென்பொருள் வசதிகளுடன் அனைத்து கண்காணிப்பு அலுவலர்களுக்கும் வழங்கப்படும்.

மேலும், அனைத்து கண்காணிப்பு அலுவலர்களுக்கும் வாக்கி டாக்கிகள் பயன்பாட்டிற்காக வழங்கப்படும். அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தடையற்ற மின்வசதிக்காக ஜெனரேட்டர்களை தயார்நிலையில் வைக்க வேண்டும். கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை கண்காணித்து தங்குதடையின்றி வெளியேற்றிடவும், மக்கள் பாதிக்காதவாறு அவர்களுக்கு தேவையான உணவு வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்ய வேண்டும். பேரிடர் கால மேலாண்மை செயல்பாடுகளுக்காக சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, மின்துறை, குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தேவையான இயந்திரங்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி, கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) லலிதா, இணை ஆணையர் (கல்வி) விஜயா ராணி, துணை ஆணையாளர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் கண்ணன், சிவஞானம், உமா மகேஷ்வரி, மகேஸ்வரி ரவிக்குமார், ஜானி டாம் வர்கீஸ், விசாகன், கணேசன், பிரதாப், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, (வடக்கு), அமித், (தெற்கு), பிரவீன் குமார், (மத்தியம்) மற்றும் தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article