புதுடெல்லி: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் மாதம், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி லீட்ஸ் நகரில் துவங்குகிறது. கடைசி போட்டி ஜூலை 23 – 27 தேதிகளில் லண்டனில் நடக்கிறது. 4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 – 2027 வரை நடைபெற உள்ளன. இதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான டெஸ்ட் போட்டி தொடர்களில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இத் தொடரே முதலாவதாக அமைந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில், துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தமிழக அதிரடி பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல், தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று வெளியிட்டார்.
* மிஸ் ஆன ஷ்ரேயாஸ்
இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி, அதிரடி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட சில பிரபல வீரர்கள் இடம்பெறவில்லை. கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது முதுகில் காயமடைந்து பின் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் தேறிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்பொறுப்பு பும்ராவுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து நடக்கும் முதல் தொடராக, இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் புதிய கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
The post இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டி: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு; 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.