காலம் அறிந்து பயிர் செய் என்பார்கள். ஒவ்வொரு பட்டத்திற்கும் சில பயிர்கள் ஏற்றவையாக இருக்கும். அவ்வாறு செய்யப்படும் பயிர்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். அதன்படி எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம்? இதோ பயனுள்ள பட்டியல்!
வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயம் பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றைப் பயிரிடலாம்.
சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி மாதங்களில் அவரையைப் பயிரிடலாம். ஆடி, மாசி மாதம் கத்தரி பயிரிடலாம்.
மாசி, பங்குனி மாதங்கள் வெண்டை பயிரிடுவதற்கு ஏற்ற பருவம். வைகாசி, ஆனி, மார்கழி, கார்த்திகை மாதங்கள் மிளகாய், கொத்தவரை போன்ற காய்கறி செடிகளை பயிரிடலாம்.
ஆடி, கார்த்திகை, மாசி மாதம் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்ற பருவம். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நெல் பயிரிடலாம். ஆடி, மாசி மாதம் உளுந்து விதைப்பிற்கு ஏற்ற பருவம்.
மாசி, பங்குனி மாதங்கள் கம்பு விதைப்பிற்கு ஏற்றவை. சித்திரை, மாசி, கார்த்திகை மாதங்கள் சோளம் விதைப்பிற்கு ஏற்றவை.
ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தென்னை நடவுக்கு தோது. கார்த்திகை, மார்கழி மாதங்கள் வாழை நடவிற்கு சிறந்தவை.
ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்கள் பருத்தி சாகுபடிக்கு ஏற்றது. ஆடி மாதத்தில் பயிறு வகைகளான தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை போன்ற தானியங்களை விதைக்கலாம். ஆமணக்கு, தக்காளி போன்றவற்றை ஆண்டு முழுதும் பயிரிடலாம்.
The post பருவத்திற்கேற்ற பயிர்கள்! appeared first on Dinakaran.