சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லையென லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார். ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம். வழக்கமான பரிசோதனகளுக்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இதய நோய் வல்லுனர் மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்த நிலையில், அடி வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காலை 6 மணி முதல் நடிகர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 2 முதல் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்ட பின்னர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் பேசினார். சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
The post பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்: அமைச்சர் மா.சுப்பிரமியன் appeared first on Dinakaran.