புதுச்சேரி, பிப். 24: புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு பரிசு பொருள் வந்துள்ளதாக கூறி ரூ.16.21 லட்சம் ஏமாற்றியது உள்பட மொத்தமாக 6 பேரிடம் ரூ.17.50 லட்சத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டை சேர்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் தெரியாத ஆண் நபர் ஒருவர் நட்பாகி பேசி வந்துள்ளார். பிறகு அந்த நபர் கூரியர் மூலம் பரிசு அனுப்புவதாக கூறியிருக்கிறார்.
அடுத்த நாள் அந்த பெண்ணுக்கு தெரியாத நபர் போன் செய்து சுங்கத்துறை அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது, ஒரு பரிசு பொருள் வந்துள்ளதாகவும், இதற்கு செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி புதுச்சேரியை சேர்ந்த பெண்ணும் ரூ.16.21 லட்சத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த சுப்ரமணியன் என்பவர் கேதார்நாத் சுற்றுலா பேக்கேஜ் தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார்.
அதில் அவருக்கு கிடைத்த தொலைபேசி எண் மூலம் தெரியாத நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர் விடுதி முன்பதிவுக்கு ரூ.10 ஆயிரம், விமான டிக்கெட் மற்றும் கார் முன்பதிவு செய்வதற்கு ரூ.42 ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதையெல்லாம் நம்பி அந்த நபருக்கு ஆனந்த சுப்ரமணியன் மொத்தமாக ரூ.67 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த ஷபிர்தீன் என்பவரின் நண்பர் பெயரில் மோசடி நபர் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார்.
பின்னர், பேஸ்புக் வழியாக ஷபிர்தீனிடம் நண்பர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவசர தேவைக்கு பணம் அனுப்பி வைக்குமாறு மெசேஜ் செய்துள்ளார். அவரும் தன்னுடைய நண்பர் என நினைத்து மோசடி நபருக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் உட்பட மொத்தமாக 6 பேரிடம் ரூ.17.50 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றி பறித்து சென்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பரிசு பொருள் வந்துள்ளதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.16.21 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.