பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜர்: வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு

3 days ago 2

சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள். விவாகரத்து வழக்கில் வரும் 27ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து, இருவரிடமும் நீதிபதி தனது அறையில் சுமார் அரைமணி நேரம் பேசினார். பின்னர் இந்த வழக்கில் 27ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

 

The post பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜர்: வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article