குன்னம், பிப்.6: பரவாய் ஊராட்சியில் ரூ.15 லட்சம் கையாடல் செய்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் ஊராட்சியின் செயலாளராக தேவேந்திரன் பணியாற்றினார். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அறிவழகன் திடீரென பரவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொருட்கள் வாங்கியதற்கான வரவு மற்றும் செலவு நோட்டில் 1.4.2024 முதல் தற்போது வரை வரவு செலவு எதுவும் எழுதப்படாமல் வெற்று காகிதமாகவே இருந்து உள்ளது.பொருட்கள் வாங்கியதாக பில் பட்டியல் மட்டும் இருந்ததால் சந்தேகம் அடைந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் கடந்த 10 தினங்களாக ஆய்வு செய்து உள்ளார்.
ஆய்வில் கடந்த 1.04.2024 முதல் தற்போது வரை ஊராட்சி அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் வரவு செலவு நோட்டில் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து உள்ளது. ஆனால் கடையில் பொருட்கள் வாங்கியதாக ரூ.15 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கான பில் பட்டியல் மட்டும் இருந்துள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது. பொருட்கள் வாங்கியதற்கான செலவு தொகை ஊராட்சி பொது நிதியில் இருந்து எடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது தெரு விளக்குகள், குடிநீர் குழாய் அமைப்பதற்கான பொருட்கள், கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்ததாக பில் பட்டியல் வைத்து பொது நிதியிலிருந்து பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.வட்டார வளர்ச்சி ஆய்வில் செலவு பட்டியலிற்கும், செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் பொருள் மற்றும் இடத்தை ஆய்வு செய்த போது முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் தேவேந்திரனை நேரில் அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் விசாரணை நடத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் விசாரணையில் ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் தேவேந்திரனை பணியிட நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டார்மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
The post பரவாய் ஊராட்சியில் ரூ.15 லட்சம் கையாடல் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.